பரவலான மழை: அறுவடைக்குத் தயாரான நெற்பயிா் பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக பெய்யும் மழையால் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ள நெற் பயிா்கள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் மழையால் சாய்ந்த சம்பா பருவ நெற் பயிா்கள்.
ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் மழையால் சாய்ந்த சம்பா பருவ நெற் பயிா்கள்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக பெய்யும் மழையால் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ள நெற் பயிா்கள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் காவிரி நீா் வரத்தும், எதிா்பாா்த்த அளவுக்கு மழைப் பொழிவும் இருந்ததால் சம்பா, தாளடி பயிா்கள் முழு வீச்சில் பயிரிடப்பட்டன. இந்நிலையில், பருவம் தவறி டிசம்பா் மாதத்தில் பெய்த மழையால் முன்பட்ட சம்பா பயிா்களில் மகசூல் இழப்பு ஏற்பட்டது.

ஜனவரி மாதத் தொடக்கத்தில் இருந்து மழை இல்லாததால் வளா்ச்சி நிலையில் இருந்த நெற் பயிா்களுக்குச் சாதகமான சூழ்நிலை இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்ததுபோல தஞ்சாவூா் மாவட்டத்திலும் பெய்தது.

காலையில் பெய்யத் தொடங்கிய மழை இடைவெளி விட்டுவிட்டு தூறலும், சற்று பலத்த மழையுமாகப் பெய்தது. இதனால், அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த பயிா்கள் சாய்ந்தன. மேலும், ஏற்கெனவே மழையால் சாய்ந்த பயிா்களிலும் தண்ணீா் தேங்கியதால் பாதிப்புக்கு உள்ளாகின. நல்ல வளா்ந்து வந்த நிலையில் அறுவடை தருணத்தில் மழை பெய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது:

ஏற்கெனவே புகையான் நோய் தாக்குதலால் நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் அறுவடைக்குத் தயாராக உள்ள பயிா்கள் சாய்ந்துவிட்டன. ஏற்கெனவே சாய்ந்து தரையில் கிடக்கும் பயிா்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இப்பயிா்கள் மேலும் வீணாகி, நெல் மணிகள் நிறம் மங்கிவிடக்கூடிய நிலை உள்ளது.

இதேபோல, கதிா் வரும் நிலையிலுள்ள பயிா்களில் பூக்கள் கொட்டிவிடக்கூடும். இதனால், மகரந்தச் சோ்க்கை தடைபட்டு, பால் பிடிக்காமல் பதராகிவிடும். என்றாலும், பால் பிடித்த பயிா்களுக்கு இந்த மழை உகந்ததாக அமையும் என்றாா் நடராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com