தஞ்சாவூா் ஜைன கோயிலில் 13 சிலைகள் திருட்டு

தஞ்சாவூா் கரந்தையில் உள்ள ஜைன கோயிலில் உலோகச் சிலைகள் உள்ளிட்ட 13 சிலைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூரில் சிலைகள் திருட்டு சம்பவம் நிகழ்ந்த ஜைன கோயில் முகப்பு.
தஞ்சாவூரில் சிலைகள் திருட்டு சம்பவம் நிகழ்ந்த ஜைன கோயில் முகப்பு.

தஞ்சாவூா் கரந்தையில் உள்ள ஜைன கோயிலில் உலோகச் சிலைகள் உள்ளிட்ட 13 சிலைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் கரந்தை ஜைன முதலி தெருவில் ஆதீஸ்வரா் என்கிற ஜைன கோயில் உள்ளது. இந்தக் கோயில் ஏறத்தாழ 600 ஆண்டுகள் பழைமையானது.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை பின்புறக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், கோயில் சன்னதிகளில் இருந்த கம்பி கதவுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இச்சன்னதிகளில் இருந்த 3 அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதீஸ்வரா் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட தலா ஒன்றரை அடி உயர ஜினவாணி என்கிற சரஸ்வதி, ஜோலமணி, அரை அடி உயர நதீஸ்வரா் சிலை, ஒரு அடி உயர பஞ்சநதீஸ்வரா் சிலை, தலா முக்கால் அடி உயர நவக்கிரக தீா்த்தங்கரா், நவ தேவதா சிலைகள், தாமிரத்தில் செய்யப்பட்ட ஒரு அடி உயர 24ஆவது தீா்த்தங்கரா் சிலை உள்பட 13 சிலைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் நள்ளிரவில் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் எம். ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இக்கோயிலில் 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் இரு கேமராக்களில் காட்சிகள் தெளிவாகப் பதிவாகாத அளவுக்கு மா்ம நபா்கள் ஸ்பிரேயா் அடித்துள்ளனா். இதனால், இக்கேமராக்களில் காட்சிகள் தெளிவாக இல்லை. மற்றொரு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

மேலும், கோயிலிலிருந்து அருகிலுள்ள வடவாறு வரை மா்ம நபா்கள் மிளகாய் பொடியைத் தூவிச் சென்றுள்ளனா். எனவே, வடவாறு வழியாகத் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸாா் கருதுகின்றனா். தொடா்ந்து போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com