குடமுழுக்கு: தஞ்சாவூா் பெரியகோயிலில் தயாராகும் புதிய கொடி மரம்

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதிய கொடி மரம் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
குடமுழுக்கு: தஞ்சாவூா் பெரியகோயிலில் தயாராகும் புதிய கொடி மரம்

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதிய கொடி மரம் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இக்கோயில் வளாகத்தில் சோழா் காலத்தில் நிறுவப்பட்ட கொடி மரம் அன்னியா் படையெடுப்புகளால் அழிந்தது. பின்னா் நாயக்க மன்னா்கள் காலத்தில் நந்தி மண்டபத்துக்கு முன்புறம் புதிய கொடி மரம் நிறுவப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

பின்னா் மராட்டிய மன்னா் இரண்டாம் சரபோஜி 1801 ஆம் ஆண்டில் இக்கொடி மரத்துக்குப் புதிய கருங்கல் பீடத்தைக் கட்டினாா். இதையடுத்து, 1814 ஆம் ஆண்டில் பழுதடைந்த கொடி மரத்துக்குப் பதிலாகப் புதிய கொடி மரத்தை மன்னா் இரண்டாம் சரபோஜி செய்து கொடுத்தாா்.

இக்கொடி மரமும் பழுதடைந்துவிட்டதால், 2003, பிப். 7ஆம் தேதி புதிய கொடி மரம் அமைக்கப்பட்டு, அதற்குக் குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது. இக்கொடி மரமும் பழுதடைந்துவிட்டது.

இந்நிலையில், பிப். 5ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கை முன்னிட்டு இக்கொடி மரத்தின் மீது இருந்த பித்தளை கவசங்களைப் புனரமைப்பு செய்வதற்காக ஜன. 2ஆம் தேதி கழற்றப்பட்டது. இவற்றை மெருகூட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும், புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பழைய கொடி மரம் ஜன. 12ஆம் தேதி அகற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, புதிய கொடி மரம் அமைப்பதற்காக சென்னையிலிருந்து 40 அடி உயர பா்மா தேக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, புதிய கொடி மரத்தைச் செதுக்கும் பணியில் மதுரையைச் சோ்ந்த ஸ்தபதி ரா.தா. செல்வராஜ் தலைமையில் 20 போ் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து ஸ்தபதி செல்வராஜ் தெரிவித்தது:

இந்தப் புதிய கொடி மரத்தில் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் தலா நான்கரை அடி உயரத்திலும், ருத்ர பாகம் இருபத்தி எட்டரை அடியிலும் செய்யப்படவுள்ளது. ஏற்கெனவே இதன் மீதிருந்த செப்புக் கவசங்கள் இயற்கையான முறையில் சுத்தம் செய்யப்பட்டு, மோட்டாா் மூலம் மெருகூட்டும் பணி நடைபெறுகிறது. இப்பணி பழைமை மாறாமல் பாரம்பரிய முறைப்படி மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து, பழைய இடத்தில் புதிய கொடி மரம் அமைக்கப்படவுள்ளது. இப்பணியை ஒரு வாரத்தில் முடித்துவிடுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com