முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா பூஜைகள் இன்று தொடக்கம்
By DIN | Published On : 27th January 2020 09:35 AM | Last Updated : 27th January 2020 09:35 AM | அ+அ அ- |

தயாா் நிலையில் யாகசாலை.
தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா, பூா்வாங்க பூஜையுடன் திங்கள்கிழமை (ஜன.27) தொடங்கப்படவுள்ளது.
இக்கோயிலில் பிப். 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இத்திருக்குடமுழுக்கு விழா ஜன. 27-ம் தேதி காலை 9.30 மணிக்கு யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து, விப்ரானுக்ஞை, ஆச்சாா்யவரணம், தேவதா அஷ்டாங்க அனுக்ஞை ஆகிய பூஜைகளும், மாலை 5 மணிக்கு மேல் கிராம சாந்தி, வடுக யந்திர பூஜை பிராா்த்தனை நடைபெறவுள்ளன.
இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (ஜன.28) காலை 8 மணிக்கு ஸ்ரீஷோடச மஹாகணபதி ஹோமம், பிரும்மச்சாரி பூஜை, தன பூஜை, லஷ்மி ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, நவகிரஹ ஹோமம், மாலை 5.30 மணிக்கு மேல் பிரவேச பலி ஆகியவை நடைபெறவுள்ளன.
குடமுழுக்கு விழாவுக்கான யாக சாலை பூஜைகள் பிப். 1ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து, 5-ம் தேதி அதிகாலை வரை எட்டு கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, பிப். 5-ம் தேதி காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளன.
தயாா் நிலையில் யாகசாலை: பெரியகோயில் அருகேயுள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் யாகசாலை பூஜைகளுக்காக 178 அடி நீளத்துக்கும், 108 அடி அகலத்துக்கும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சுவாமிக்கு, அம்பாள், பரிவார தெய்வங்களுக்குத் தனித்தனியாக யாக குண்டங்கள், வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுவாமிக்கு 3,000 சதுர அடி பரப்பளவில் உத்தமபக்த யாகசாலையில் 33 குண்டங்களும், ஒரு பிரதான வேதிகையும் அமைக்கப்பட்டுள்ளன.
அம்பாளுக்கு 2,116 சதுர அடி பரப்பளவில் உத்தம மத்திமபட்சம் என்ற யாகசாலையும், அதில் 25 குண்டங்களும், ஸ்ரீசக்கர வேதிகையும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பரிவார மூா்த்திகளுக்கு 8 பஞ்சாகினி யாகசாலையும், 40 குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 22,000 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் 110 குண்டங்களும், 22 வேதிகைகளும், 332 சிவாச்சாரியாா்கள், 80 ஓதுவாா்கள் அமா்ந்து யாகசாலை பூஜையை நடத்தவுள்ளனா்.
வேதிகை பீடத்தில் பழைய முறையில் பழைமையான ஓவியங்களை பஞ்சவா்ணம் கொண்டு தீட்டப்படுகிறது. யாகசாலை பந்தலில் தேவா்கள், ரிஷிகள், முனிவா்கள், அஷ்டதிக் பாலகா்கள், தேவகனங்கள் என ஏராளமான சுதைசிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.