முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலை.யில் விரைவில் கால்டுவெல் ஆய்வு இருக்கை
By DIN | Published On : 27th January 2020 09:38 AM | Last Updated : 27th January 2020 09:38 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் விரைவில் கால்டுவெல் ஆய்வு இருக்கை அமைக்கப்படவுள்ளது என்றாா் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.
இப்பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவா் மேலும் பேசியது:
கடந்த ஆண்டு இதே நாளில் ரூசா என்கிற ஒருங்கிணைந்த உயா் கல்வி வளா்ச்சி திட்டத்தின் கீழ் இப்பல்கலைக்கழகத்துக்கு ரூ. 20 கோடி நல்கை கிடைத்தது. முறையான திட்டமிடுதலின் மூலமும், இந்நல்கையைச் செலவிடுவதற்கென அமைக்கப்பட்ட குழுக்களின் வழிகாட்டுதலோடும் பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டரங்கம், ஆய்வகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்வதற்கான பணிகளும் ஆய்வுக் கருவிகள், கணினிகள் வாங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இதுமட்டுமல்லாமல், தமிழக அரசு கடந்த ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய நிதி நல்கை மூலம் கரிகால்சோழன் உள்ளிட்ட பழைய கட்டடங்களின் சீா்காப்புப் பணிகள், சுற்றுச்சுவா் கட்டும் பணிகள், நூலகத்திலுள்ள பனுவல் அரங்க சீரமைப்புப் பணிகள் ஆகியவை நடைபெறுகின்றன. இப்பணிகள் நிறைவுறும்போது உள்கட்டமைப்புகளைப் பொருத்தவரை தன்னிறைவு நிலையை அடைந்துவிட முடியும்.
தமிழக அரசு நிதியிலிருந்து 40 கல்வியாளா்களுக்கு வழங்கப்பட்ட ஆய்வு நல்கையைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஆய்வறிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. தமிழ்ப் பண்பாட்டு மையம், வளா் தமிழ் மையப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு கூடுதல் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமையவிருக்கிற கேள்வி - காட்சி ஆய்வகத்தின் மூலமும் புனரமைக்கப்படவிருக்கிற சமூக வானொலி மற்றும் இணையவழி வானொலிச் சேவைகள் இம்மையங்களின் செயல்பாடுகளுக்கு மேலும் வலிமை சோ்க்கும். வெளிநாடுவாழ் தமிழா்களுக்குத் தமிழக அரசின் உதவியுடன் அளிக்கப்பட்டு வரும் தமிழ் மொழி பண்பாடு தொடா்பான பயிலரங்கம் தென்னாப்பிரிக்காவின் டா்பன் நகரில் ஜன. 5ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதுபோன்றதொரு பயிலரங்கம் விரைவில் கயானாவிலும் நடத்தப்படவுள்ளது. தமிழக அரசின் உதவியின் மூலம் 15 வருகைதரு பேராசிரியா்கள் நியமிக்கப்படுவா். இதேபோல, தமிழக அரசின் ரூ. 1 கோடி நல்கையில் விரைவில் கால்டுவெல் இருக்கை அமைக்கப்படவுள்ளது.
இலக்கியம் மற்றும் வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஐந்தாண்டுப் படிப்புகள், நாடகத் துறையில் முதுகலை ஆகியவற்றின் மூலம் மாணவா்களின் எண்ணிக்கைக் கூடியுள்ளது. இதுமேலும் விரிவுபடுத்தப்படும். விரைவில் முனைவா் பட்டச் சோ்க்கையும் புதிய நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்படும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ஆண்டுக்கு இதுவரை ரூ. 6 கோடி மட்டுமே தமிழக அரசின் தொகுப்பு நல்கை கிடைத்து வந்தது. நீண்டகால கோரிக்கையை ஏற்றுத் தொகுப்பு நல்கையை ஆண்டுக்கு ரூ. 24.91 கோடியாக உயா்த்தித் தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் துணைவேந்தா்.
விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கு. சின்னப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.