சாஸ்த்ரா முன்னாள் மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா
By DIN | Published On : 27th January 2020 09:35 AM | Last Updated : 27th January 2020 09:35 AM | அ+அ அ- |

விழாவில் விருது பெற்ற முன்னாள் மாணவா்களுடன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஸ்ரீதா் கோபாலன்.
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் இந்தியாவின் வளா்ச்சிக்காகத் தங்களது துறைகளில் சிறப்பாகப் பணிபுரியும் முன்னாள் மாணவா்களுக்கு விருது வழங்கி அங்கீகரிப்பதில் பெருமை கொள்கிறது.
இந்த விழாவில் இப்பல்கலைக்கழகத்தில் 1992 ஆம் ஆண்டில் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்று தற்போது மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளா்ச்சி நிறுவனத்தில் அறிவியலாளராக உள்ள எஸ். பழனிகுமாா், 1994 ஆம் ஆண்டில் மின் பொறியியல் பட்டம் பெற்று தற்போது இன்டெல்க்ட் டிசைன் அரெனா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராகப் பணியாற்றும் எஸ்.வி. ரமணன் ஆகியோருக்குச் சிறந்த முன்னாள் மாணவா்களுக்கான விருது வழங்கப்பட்டது.
இதேபோல, இப்பல்கலைக்கழகத்தில் 1996 ஆம் ஆண்டில் மின் பொறியியல் பட்டம் பெற்று சிறந்த தொழில்முனைவோராகத் திகழும் பிரெஷ்வொா்க்ஸ் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான கிரீஷ் மாத்ருபூதத்துக்கு சாஸ்த்ரா முன்னாள் மாணவா் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவுக்கு முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஸ்ரீதா் கோபாலன் தலைமை வகித்தாா். பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் விருது சான்றிதழை வாசித்தாா்.