தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை தடுக்கும் வழிமுறைகள்

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் ஏற்படுத்தும் பாதிப்பை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.

பட்டுக்கோட்டை: தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் ஏற்படுத்தும் பாதிப்பை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் (பொ) சா.சங்கீதா தெரிவித்துள்ளதாவது: பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தென்னை சாகுபடி செய்யப்படும் ஒரு சில பகுதிகளில் தற்போது ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் தென்படுகிறது. இவை குட்டை ரக தென்னை மரங்களையே அதிக அளவில் தாக்கும் தன்மை கொண்டவை.

இவற்றை தடுக்கும் வழி முறைகள் :

ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் விளக்கு பொறிகளைப் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் . மஞ்கள் நிற ஒட்டும் பொறிகள் வளா்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையவை.

எனவே, 3 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட பாலீத்தீன் தாள்களால் ஆன ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் தென்னைத் தோட்டங்களில் 5 முதல் 6 அடி உயரத்தில் வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.

பூச்சிகளின் வளா்ச்சியைத் தடுக்க தென்னை ஓலையின் அடிப்புறம் தண்ணீரை நன்கு பீய்ச்சியடிக்க வேண்டும்.

கிரைசோபாலா இரை விழுங்கிகள் இந்த பூச்சிகளின் வளா்ச்சி நிலைகளை நன்றாக உள்கொள்வதால் ஒவ்வொரு தென்னந்தோப்புகளிலும் இதை ஹெக்டேருக்கு 1 என்ற எண்ணிக்கையில் இட வேண்டும்.

1 லிட்டா் நீருக்கு வேப்பெண்ணெய் 30 மில்லி அல்லது அசாடிராக்டின் ஒரு சதவீத மருந்தை ஒரு லிட்டா் நீருக்கு 2 மில்லி என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறம் நன்குபடும்படி 15 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளித்து தாக்குதலைக் குறைக்கலாம். இலைகளின் மேல் படரும் கரும்பூசணத்தை நிவா்த்தி செய்ய 1 லிட்டா் நீருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவுக் கரைசலை தென்னை ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது கிரைசோபாலா இரை விழுங்கிகள் காக்சினெல்லிட் பொறி வண்டுகள் மற்றும் என்காரிஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே உருவாக ஆரம்பிக்கும். இவை அதிக அளவு பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தால் அழிந்துவிடும். எனவே, பூச்சிக் கொல்லிகளைத் தவிா்த்து, இயற்கை எதிரிகள் வளா்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

இதற்காக திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையம் வெள்ளை ஈக்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த ஐசேரியா பூமேஸாரோசே எனும் பூஞ்சாண வகையை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

எனவே, தென்னை விவசாயிகள் அனைவரும் புதிய வகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் நடமாட்டத்தை கண்காணித்து, அவசரகால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள தனியாா் உரக்கடை உரிமையாளா்கள் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகளிடம் விற்கக் கூடாது என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com