பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நெல்லை வாரி இறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

தஞ்சாவூர் அருகே வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் சனிக்கிழமை விவசாயிகள் விதை நெல்லை வாரி இறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நெல்லை வாரி இறைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

தஞ்சாவூர் அருகே வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் சனிக்கிழமை விவசாயிகள் விதை நெல்லை வாரி இறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் அருகே கோனேரிராஜபுரம் வாய்க்கால், திருவாலம்பொழில் வாய்க்கால், சங்கரகுல வாய்க்கால், திருத்துக்கால் வாய்க்கால், கண்டியூர் வாய்க்கால் ஆகியவற்றில் மேட்டூர் அணை திறந்து ஒரு மாதமாகியும் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடியைத் தொடங்க முடியவில்லை என அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கல்லணையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ள தலைமதகு பகுதிகளான இப்பகுதிகளில் ஆற்று நீர் வராததால் அடிபம்பில் குடங்கள், வாளிகள் மூலம் தண்ணீர் பிடித்து நாற்றங்காலை காப்பாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள் சுமார் 50 பேர் தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் பகுதியில் உள்ள பொதுப் பணித் துறைக் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் விதை நெல் மூட்டைகளுடன் சனிக்கிழமை காலை திரண்டு தரையில் அமர்ந்து உயர் அலுவலர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். அலுவலர்கள் வந்த பின்னர் நெல்லை வாரி இறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்குத் தலைமை வகித்த தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் துணைச் செயலர் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் தெரிவித்தது: நிகழாண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது, காவிரி டெல்டா பகுதியில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்தார். 

இதை நம்பி நாங்களும் எங்களது பகுதியில் குறுவை சாகுபடியைத் தொடங்கினோம். இந்நிலையில், இப்பகுதி சம்பா பாசனப் பகுதி என்றும், மேடான பகுதி எனவும் பொதுப் பணித் துறைப் பொய்யான தகவலை அளித்துள்ளது. நாங்கள் பரம்பரை பரம்பரையாக குறுவை சாகுபடி செய்து வருவதற்கு வருவாய்த் துறை ஆவணங்களில் பதிவு உள்ளது. இதைக் கண்டித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டோம். கிட்டத்தட்ட 2,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்வதற்கு 100 ஏக்கரில் நாற்றங்கால் தயாரித்து வருகிறோம். தண்ணீர் வராவிட்டால் நாற்றங்கால்கள் வீணாகிவிடும். ஏறத்தாழ 2,800 கன அடிவீதம் கொள்ளளவு உடைய குடமுருட்டி ஆற்றில் தற்போது சுமார் 1,000 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 

மேலும், மணல் அள்ளப்பட்டதால், ஆறு பள்ளமாகி வாய்க்கால்களுக்குள் தண்ணீர் செல்லவில்லை. எனவே, முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீர் விட்டால்தான் எங்களது வாய்க்கால்களுக்குத் தண்ணீர் வரும் என்றார் சுகுமாரன். இதையடுத்து, அலுவலர்களிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com