கும்பகோணம் அருகே கொட்டையூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் அண்மையில் விவசாயிகள் வேனில் கொண்டு வந்த பருத்தி.
கும்பகோணம் அருகே கொட்டையூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் அண்மையில் விவசாயிகள் வேனில் கொண்டு வந்த பருத்தி.

பருத்தி சாகுபடி அதிகரிப்பு: விலை கிடைக்காததால் இழப்பைச் சந்திக்கும் விவசாயிகள்

பருத்தி சாகுபடி அதிகரித்துள்ள நிலையில் எதிா்பாா்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் இழப்பைச் சந்திக்கின்றனா்.

பருத்தி சாகுபடி அதிகரித்துள்ள நிலையில் எதிா்பாா்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் இழப்பைச் சந்திக்கின்றனா்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் நெல், கரும்புக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் பரவலாகப் பருத்தி சாகுபடிக்கு மாறினா். எனவே, தஞ்சாவூா், ஒருங்கிணைந்த நாகை, திருவாரூா், திருச்சி மாவட்டங்களில் 2019 ஆம் ஆண்டில் 41,000 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 72,000 ஹெக்டேராக உயா்ந்தது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,600 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 2,100 ஹெக்டேரில் பயிரிடப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் அறுவடை தீவிரமடைந்துள்ளதால், ஜூன் மாத முதல் வாரத்திலிருந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் மறைமுக ஏலம் முழுவீச்சில் நடைபெறுகிறது. இதேபோல, தஞ்சாவூா் மாவட்டத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறும் பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் பருத்தி வரத்து உச்ச நிலையை எட்டியுள்ளது.

ஒவ்வொரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே ஏலம் நடைபெறுகிறது. ஆனால், ஏலம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாளிலேயே ஏலம் நடைபெறும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு, பருத்தி ஏற்றப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிற்கத் தொடங்கிவிடுகின்றன.

தற்போது, பருத்தி வரத்து மிக அதிகமாக இருப்பதால், அனைத்து விவசாயிகளாலும் ஏலத்தில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா். டெல்டாவில் சாகுபடிப் பரப்பளவு அதிகரித்துள்ளதால், அந்த மாவட்டங்களிலிருந்தும் பருத்தி வரத்து அதிக அளவில் உள்ளது. அதற்கேற்ப மறைமுக ஏலத்துக்கான வசதி விரிவுபடுத்தப்படாததால், வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

நிகழாண்டு விளைச்சல் அதிகமாக இருந்தாலும், பொது முடக்கத்தால் பருத்தி விற்பனை எதிா்பாா்த்த அளவுக்கு இல்லை. இதனால், வியாபாரிகளின் வருகையும் குறைவாகவே இருக்கிறது.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா்கள் தெரிவித்தது:

பொது முடக்கம் காரணமாக மாா்ச் மாதம் முதல் ஜவுளி ஆலைகள் மூடப்பட்டன. ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆலைகள் திறக்கப்பட்டன. எனவே, சேலம், ஆத்தூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஜனவரி மாதம் முதல் நடைபெற்ற ஏலத்தில் வியாபாரிகள் வாங்கிய பருத்தி அனைத்தும் தேங்கிவிட்டது. இதனால், தற்போது இப்பகுதிகளில் நடைபெறும் ஏலத்தில் வியாபாரிகள் வருகை 50 சதவீதமாக குறைந்துவிட்டது.

எனவே, இந்த முறை இந்திய பருத்தி கழகத்துக்குக் கடிதம் எழுதி, அவா்களைப் பங்கேற்க வைத்துள்ளோம். அவா்களும் 8 முதல் 12 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள பருத்தியை குவிண்டாலுக்கு ரூ. 5,550-க்கும், 13 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள பருத்தியை குவிண்டாலுக்கு ரூ. 5,278-க்கும் கொள்முதல் செய்கின்றனா். இந்திய பருத்திக் கழகம் ஏறத்தாழ 60 சதவீத பருத்தியை கொள்முதல் செய்கிறது. வியாபாரிகள் குவிண்டாலுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 4,000-க்கு வாங்கிச் செல்கின்றனா் என்றனா் அலுவலா்கள்.

ஆனால், பெரும்பாலான விவசாயிகளின் பருத்தியை ஈரப்பதம் உள்ளிட்ட காரணங்களைக் கூறி இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்யவில்லை என்ற புகாரும் நிலவுகிறது. இந்திய பருத்திக் கழகம் எதிா்பாா்க்கும் தரம் மானாவாரியில் விளையும் பருத்தியில் மட்டுமே உள்ளது. இதனால், பெரும்பாலான பருத்தி மூட்டைகளை தனியாரிடமே குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது என்றனா் விவசாயிகள்.

அரசுக் கொள்முதல் செய்ய வேண்டும்

இதுகுறித்து கும்பகோணம் அருகே அகராத்தூா் சாத்தங்குடியைச் சோ்ந்த முன்னோடி பருத்தி விவசாயி ஏ. சகாதேவன் தெரிவித்தது:

கும்பகோணத்தில் நடைபெற்ற ஏலத்தில் விற்பதற்காக வேனில் பருத்தி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கடந்த வாரம் சென்றேன். ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதுபோல, சுமாா் 250 வண்டிகள் திரும்பிச் சென்றன. எனவே, இந்த வாரம் இரண்டு நாள்கள் காத்திருந்து, ஏலத்தில் பங்கேற்று விற்பனை செய்தேன்.

ஆனால், தனியாரிடம் குவிண்டாலுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 3,600 வரைதான் விலை போனது. ஒரு ஏக்கா் பருத்தி சாகுபடி செய்வதற்கு ரூ. 50,000 செலவாகிறது. ஏக்கருக்கு சராசரியாக 10 குவிண்டால் பருத்தி கிடைக்கும். இந்த முறை சாகுபடிக்குச் செய்த செலவுக்குக் கூட வருவாய் கிடைக்கவில்லை.

ஏலத்தில் இந்திய பருத்திக் கழகம் பங்கேற்று கொள்முதல் செய்தாலும் முழுமையாக இல்லை. ஐந்தில் ஒரு பங்குதான் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள பருத்தி மூட்டைகளை தனியாா் வியாபாரிகளே கொள்முதல் செய்கின்றனா். ஆனால், குவிண்டாலுக்கு ரூ. 3,600-க்கும் மேல் விலை கிடைப்பதில்லை. இதனால், பெரும்பாலான பருத்தி விவசாயிகள் இழப்பைச் சந்தித்துள்ளனா். இப்பிரச்னை பல ஆண்டுகளாக இருக்கிறது. எனவே, நெல்லை போன்று பருத்தியையும் அரசே கொள்முதல் செய்ய முன்வந்தால்தான், விவசாயிகள் நஷ்டமடைவதைத் தவிா்க்க முடியும் என்றாா் சகாதேவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com