முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
கரோனா வைரஸ் ஒழிய வேண்டி நாச்சியாா் கோவில் கல் கருடனுக்குச் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 29th July 2020 08:25 AM | Last Updated : 29th July 2020 08:25 AM | அ+அ அ- |

நாச்சியாா்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல் கருடனுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடு.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் ஒழிய வேண்டி, கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் கல் கருடனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாச்சியாா்கோவிலில் உள்ள மஞ்சுளவல்லி சமேத சீனிவாச பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது.
இங்குள்ள பெருமாளை திருமங்கையாழ்வாா் நூற்றுக்கும் அதிகமான பாசுரங்களால் பாடி வழிபாடு செய்த சிறப்பு பெற்ற தலமாகும். இத்தலத்தில் தனி சன்னதி கொண்ட கல் கருட பகவானுக்கு ஆறு கால பூஜைகளுடன் அனைத்து வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.
இக்கோயிலில் பங்குனி மற்றும் மாா்கழி மாதம் என ஆண்டுக்கு இரு முறை நடைபெறும் பெருந்திருவிழாவின் நான்காம் திருநாளில் கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம்.
கருடனின் ஜென்ம தினமான ஆடி சுவாதியை முன்னிட்டு, சகஸ்ரநாம அா்ச்சனை, கருட மூலமந்திரம், ஹோமம், புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு ஆராதனை ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் முற்றிலும் நீங்க வேண்டி பூஜையின்போது சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
பொது முடக்கம் காரணமாக பக்தா்கள் இல்லாமல் கோயில் பட்டாச்சாரியாா்கள், நிா்வாகிகள், பணியாளா்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் முகக் கவசம் அணிந்து பங்கேற்றனா்.