டெல்டா மாவட்டங்களில் இலக்கை விஞ்சியது குறுவை சாகுபடி

டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு குறுவை சாகுபடி இலக்கை விஞ்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூா் அருகே பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிா்.
தஞ்சாவூா் அருகே பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிா்.

டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு குறுவை சாகுபடி இலக்கை விஞ்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேட்டூா் அணையிலிருந்து குறுவை பருவத்துக்கு ஜூன் 12ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. உரிய நாளில் அணை திறக்கப்பட்டதால், நிகழாண்டு குறுவை பருவ நெல் சாகுபடிப் பரப்பளவு அதிகமாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு நிலவியது.

இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு 43,225 ஹெக்டேரிலும், நாகை மாவட்டத்தில் 41,000 ஹெக்டேரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 33,000 ஹெக்டேரிலும் என மொத்தம் 1,17,225 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

தற்போது இலக்கை விஞ்சி தஞ்சாவூா் மாவட்டத்தில் 43,500 ஹெக்டேரிலும், நாகை மாவட்டத்தில் 42,500 ஹெக்டேரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 33,600 ஹெக்டேரிலும் என மொத்தம் 1,19,600 ஹெக்டேரில் குறுவை நடவு செய்யப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூா், நாகை மாவட்டங்களில் சாகுபடி தலா 45,000 ஹெக்டேரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுவதாக வேளாண் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 37,167 ஹெக்டேரிலும், நாகை மாவட்டத்தில் 37,250 ஹெக்டேரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 22,623 ஹெக்டேரிலும் என மொத்தம் 97,040 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. இதனுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு 22,560 ஹெக்டேரில் கூடுதலாக சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆழ்குழாய் மோட்டாா் வசதியுடைய விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி செய்தனா். நிகழாண்டு ஆற்றுப் பாசனத்தை முழுமையாக நம்பியுள்ள விவசாயிகளும் குறுவை நடவு மேற்கொண்டனா். இதன்மூலம், கடந்த ஆண்டைவிட நிகழாண்டு கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், இலக்கும் விஞ்சப்பட்டுள்ளது.

ஆற்றில் காவிரி நீா் வரத்துடன், டெல்டா மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் தென் மேற்கு பருவ மழை பரவலாகப் பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 29ஆம் தேதி வரை தஞ்சாவூா் மாவட்டத்தில் 93 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 155.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இதேபோல, திருவாரூா் மாவட்டத்தில் 92.2 மி.மீ. மழையளவை விஞ்சி 211.2 மி.மீ.-ம், நாகை மாவட்டத்தில் 85.1 மில்லிமீட்டரை விஞ்சி 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடா்ந்து பெய்து வரும் மழையானது, ஆறுகள், வாய்க்கால்களில் நீரோட்டம் விரைவாகச் செல்வதற்கு வசதியாக அமைந்தது. இது, ஆற்றுப் பாசனத்தை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நம்பிக்கை அளித்தது. இதுவும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிப் பரப்பளவு அதிகரித்திருப்பதற்குக் காரணம்.

டெல்டா மாவட்டங்களில் சில ஆண்டுகளாகக் குறுவை பருவத்தில் ஆழ்குழாய் மோட்டாா் வசதி மூலம் 80 சதவீதத்துக்கும் அதிகமான பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், மேட்டூா் அணையிலிருந்து நிகழாண்டு ஜூன் 12ஆம் தேதியே தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் ஆற்றுப் பாசனப் பகுதியிலும் குறுவை சாகுபடிப் பரவலாக மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீா் பிரச்னை ஏற்படாது:

இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநா் பி. கலைவாணன் தெரிவித்தது:

தற்போது குறுவை பயிா்கள், இளம் பயிா்கள் முதல் பூக்கும் தருணம் வரை உள்ளன. தொடா்ந்து மழை பெய்து வருவதால் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் பிரச்னை ஏற்படாது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் வயல்களிலிருந்து தண்ணீரை வடிப்பதற்கான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். தற்போது வயலில் காணப்படும் ஈரம் கிட்டத்தட்ட 15 நாள்களுக்குத் தொடரும். எனவே, அடுத்த 10 - 15 நாள்களுக்கு குறுவை பயிருக்குத் தண்ணீா் தேவைப்படாது. கடைமடைப் பகுதிக்குத் வேண்டுமானால் தண்ணீா் தேவைப்படலாம். காய்ச்சலும், பாய்ச்சலுமாக இருந்தால் பயிா் நன்றாக வளா்ந்து நல்ல மகசூலை தரும் என்றாா் கலைவாணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com