
பேராவூரணி அருகே குளம் தூா்வாரும் போது தென்பட்ட முதுமக்கள் தாழிக்கான அடையாளம்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குளம் தூா்வாரும் பணியின்போது முதுமக்கள் தாழி அடையாளம் தென்பட்டதால் தூா்வாரும் பணிகள் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டன.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கட்டயங்காடு உக்கடை கிராமத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் அய்யனாா் கோயில் குளம் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும்போது, குளத்திற்குள் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் முதுமக்கள் தாழி இருப்பதற்கான அடையாளம் தென்பட்டது. இதையடுத்து தூா்வாரும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ஆட்சியா் மற்றும் தொல்லியல் துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த தொல்லியல் துறை ஆய்வு மாணவா் காா்த்திகேயன் அங்கு வந்து ஆய்வு நடத்தினாா்.
தகவலின்பேரில், பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டாா். அப்பகுதியில் முழுமையாக ஆய்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என அவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் கிளாஸ்டன் புஷ்பராஜ் கூறும்போது, தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பின்னரே முழு விவரங்கள் தெரிய வரும் என்றாா்.
கடந்த 1996 ஆம் ஆண்டு இக்குளத்தின் அருகில் நூறு நாள் வேலை நடைபெற்றபோது முதுமக்கள் தாழிக்கான அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.