காவலரை அரிவாளால் வெட்டிய நபர் தூக்கிட்ட நிலையில் பலி

தஞ்சாவூரில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பிடிக்கச் சென்ற காவலரை அரிவாளால் வெட்டிய நபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தார்.
தூக்கிட்ட நிலையில் இறந்துள்ள மணி.
தூக்கிட்ட நிலையில் இறந்துள்ள மணி.


தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பிடிக்கச் சென்ற காவலரை அரிவாளால் வெட்டிய நபர் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் புறவழிச் சாலையில் வண்ணாரப் பேட்டை பகுதியிலுள்ள கல்லணைக் கால்வாய் பாலத்தில் மருத்துவத் தம்பதிகளான மணிமாறன் - சுதா ஞாயிற்றுக்கிழமை இரவு காற்றுக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டியும், பீர் பாட்டிலால் தாக்கியும் 11 பவுன் நகைகளையும், ரூ.1.25 லட்சம் ரொக்கத்தையும் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டியில் சிலரை பிடிப்பதற்காகத் தனிப்படைக் காவலர்கள் இன்று (புதன்கிழமை) காலை சென்றனர். அப்பகுதியில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், கொங்கணாபாளையத்தைச் சேர்ந்த செல்வத்தை (48) பிடித்து விட்டு, மற்றொருவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது மானோஜிபட்டி பொதிகை நகரைச் சேர்ந்த பி. மணி (48) தன்னைப் பிடிக்க வந்த காவலர் கெளதமனின் (32) காலில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த கெளதமன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிறகு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிகழ்விடத்தில் திரண்டு கதறி அழும் மணியின் உறவினர்கள்

தப்பியோடிய மணியை காவல்துறையினர் தேடி வந்தனர். ஏறத்தாழ 3 கி.மீ. தொலைவில் ரெட்டிபாளையம் கிராமத்தில் பேய்வாரி வாய்க்காலிலுள்ள புங்க மரத்தில் கைலியில் தூக்கிட்ட நிலையில் மணி உயிரிழந்துள்ளார்.  இதுகுறித்து தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் காவல்துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்றனர். மணி இறந்த தகவலை அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நிகழ்விடத்தில் திரண்டனர். 

இந்நிலையில் மருத்துவத் தம்பதியிடம் வழிப்பறி செய்த சம்பவத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்றும், காவல்துறையினர் வேண்டுமென்றே எங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாகவும், மணியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உயிரிழந்த மணிக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com