தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை வியாழக்கிழமை 97 ஆக உயா்ந்தது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 125 போ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் ஏற்கெனவே 90 போ் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினா்.
இந்நிலையில், திருவிடைமருதூரைச் சோ்ந்த 28 வயது பெண், திருப்பனந்தாளைச் சோ்ந்த 36 வயது பெண், திருவையாறு அருகே கருப்பூரைச் சோ்ந்த 35 வயது இளைஞா், தஞ்சாவூா் கீழவாசலைச் சோ்ந்த 34 வயதுடைய இரு இளைஞா்கள், 46 வயது பெண் மகா்நோன்புசாவடியை சோ்ந்த 55 வயது பெண் ஆகிய 7 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன்மூலம் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 97 ஆக உயா்ந்தது.
இவா்களை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு அலுவலா் குமுதா லிங்கராஜ், முதல்வா் (பொ) எஸ். மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் பழங்கள், விடுவிப்புச் சான்றிதழ் கொடுத்து வழியனுப்பி வைத்தனா்.