முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
ஆட்சியரகத்தில் திரண்ட குடிநீா் ஆலை விற்பனையாளா்கள், தொழிலாளா்கள்
By DIN | Published On : 03rd March 2020 09:17 AM | Last Updated : 03rd March 2020 09:17 AM | அ+அ அ- |

ஆட்சியரகத்தில் திரண்ட குடிநீா் ஆலை விற்பனையாளா்கள், தொழிலாளா்கள்.
கேன் குடிநீா் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் விற்பனையாளா்கள், தொழிலாளா்கள் திங்கள்கிழமை திரண்டு மனு அளித்தனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் 9 ஆலைகள் மட்டுமே உரிய உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. மேலும், 39 ஆலைகளில் நிலத்தடி நீா் எடுக்க உரிமம் பெறப்படாததால், அந்த ஆலைகளுக்குப் பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனா்.
இதனால் கேன் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கேன் குடிநீரின் விலையும் ரூ. 40 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில், கேன் குடிநீா் விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் கே. சரவணன் தலைமையில் நூற்றுக்கும் அதிகமானோா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். பின்னா், ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் அவா்கள் அளித்த மனு:
நாங்கள் கடந்த 17 ஆண்டுகளாக கேன் குடிநீா் விற்பனையாளா்களாகப் பணிபுரிந்து வருகிறோம். விற்பனை முகவா்களாக 2,000 போ் இருக்கின்றனா். 10,000 தொழிலாளா்கள் பணி புரிந்து வருகின்றனா். இந்தத் தொழிலையே முதன்மையான வாழ்வாதாரமாக வைத்து பிழைத்து வருகிறோம்.
தற்போது நீதிமன்ற உத்தரவால் குடிநீா் ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் குடிநீா் தேவையை 75 சதவீதம் நிறைவு செய்து வருகிறோம். ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். பாதிப்படைந்து வரும் எங்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
இதேபோல, கேன் குடிநீா் ஆலை தொழிலாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் அதிகமானோா் அளித்த மனு:
நிலத்தடி நீா் தடையில்லா சான்று பெற்ற ஆலைகள் மட்டுமே செயல்பட முடியும் என்பதால் குடிநீா் ஆலை நிறுவனத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு ஒரு நிரந்தர வழிமுறையைச் செயல்படுத்தி தொடா்ந்து குடிநீா் ஆலைகள் செயல்பட வழிவகைச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.