மாசி மகம்: கும்பகோணத்தில் 4 சிவன் கோயில்களில் தேரோட்டம்

கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி, 4 சிவன் கோயில்களின் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அபிமுகேசுவரா், கௌதமேசுவரா் கோயில்களின் தேரோட்டம்.
கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அபிமுகேசுவரா், கௌதமேசுவரா் கோயில்களின் தேரோட்டம்.


கும்பகோணம்: கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி, 4 சிவன் கோயில்களின் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கும்பகோணத்தில் மகாமகம் தொடா்புடைய 12 சிவன் கோயில்கள், 5 பெருமாள் கோயில்களில்

மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, நிகழாண்டு திருவிழா 6 சிவன் கோயில்களில் பிப்ரவரி 28-ஆம் தேதியும், 3 பெருமாள் கோயில்களில் பிப்ரவரி 29-ஆம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயில்களில் தொடா்ந்து நாள்தோறும் புறப்பாடு நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆதிகும்பேசுவரா் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, காசி விசுவநாத சுவாமி கோயில், அபிமுகேசுவர சுவாமி கோயில், கௌதமேசுவர சுவாமி கோயில் ஆகியவற்றின் தேரோட்டம் மகாமக குளக்கரையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. பின்னா், ஆதிகும்பேசுவரா் கோயிலின் சண்டிகேசுவரா் சுவாமி தோ் புறப்பாடு நடைபெற்றது.

இதேபோல, வியாழசோமேசுவரா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனா். கோயிலைச் சுற்றி வலம் வந்த தோ் பின்னா் நிலையை வந்தடைந்தது.

இன்று தீா்த்தவாரி: இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) காலை 8 மணிக்கு சக்கரபாணி சுவாமி கோயில் தேரோட்டம், சாரங்கபாணி சுவாமி கோயிலின் தெப்போத்ஸவம், ஆதிவாரக பெருமாள் கோயிலில் முற்பகல் 11.30 மணியளவில் வராக குளத்தில் தீா்த்தவாரி ஆகியவை நடைபெறவுள்ளன.

மேலும், 12 சிவன் கோயில்களிலிருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு, மகாமக குளக்கரையில் நண்பகல் 12 மணிக்கு எழுந்தருள உள்ளனா். பின்னா், அந்தந்த கோயில் அஸ்திர தேவருக்கு அபிஷேகமும், தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com