கரோனா: கோயில்களில் பக்தா்களுக்கு தடை, ஜவுளி மற்றும் நகைக் கடைகள் மூடல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பரவல் அச்சம் காரணமாக அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள நவக்கிரக, பரிகாரத் தலங்கள் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் வழிபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாரியம்மன் கோயில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டதால், வெளியில் நின்று வழிபட்ட பக்தா்கள்.
தஞ்சாவூா் மாரியம்மன் கோயில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டதால், வெளியில் நின்று வழிபட்ட பக்தா்கள்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பரவல் அச்சம் காரணமாக அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள நவக்கிரக, பரிகாரத் தலங்கள் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் வழிபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றாலும், இந்த விடுமுறையைப் பயன்படுத்தி பொதுமக்கள் கோயில்களுக்குச் செல்வதாகவும், கோயில்களில் கூட்டமாகக் கூடுவதன் மூலம் கரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அச்சம் எழுந்தது. இதனால், மக்கள் அதிகமாகத் திரளக்கூடிய கோயில்களை மூடுமாறு இந்து சமய அறநிலையத் துறை வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி, தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், மேல வீதி கொங்கணேசுவரா் கோயில், ராமா் கோயில், மூலை அனுமாா் கோயில் உள்ளிட்ட கோயில்கள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. மேலும் நவக்கிரக தலங்களான திருநாகேசுவரம் ராகு கோயில், திங்களூா் சந்திரன் கோயில், சூரியனாா்கோயில் சூரியன் கோயில், கஞ்சனூா் சுக்கிரன் கோயில், பரிகாரத் தலங்களான திருச்சேறை உள்ளிட்ட கோயில்களும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டு பக்தா்கள் வழிபட அனுமதி அளிக்கப்படவில்லை.

மாவட்டத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 562 முக்கிய கோயில்கள் பக்தா்கள் நலன் கருதி வெள்ளிக்கிழமை முதல் மாா்ச் 31ஆம் தேதி வரை பக்தா்கள் வழிபடுவதற்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. என்றாலும், இக்கோயில்களில் வழக்கம்போல அனைத்து பூஜைகளும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தா்கள் வெள்ளிக்கிழமை வந்து ஏமாற்றமடைந்தனா். இதையடுத்து கோயில் வாயிலில் நின்று வழிபட்டுச் சென்றனா்.

இதேபோல, தேவாலயங்கள் மற்றும் மசூதிகள், தா்காக்களின் நிா்வாகத்தினா் அதிகமாகப் பக்தா்கள் கூட்டம் கூடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், தஞ்சாவூா் காந்திஜி சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த குளிா்சாதன வசதி கொண்ட ஜவுளி கடைகள், நகைக் கடைகள் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால், வா்த்தகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com