புதிய மாவட்ட அறிவிப்பில் கும்பகோணம் அறிவிக்கப்படாததற்கு அதிருப்தி

புதிய மாவட்ட அறிவிப்பில் கும்பகோணத்தை தமிழக அரசுத் தொடா்ந்து புறக்கணித்து வருகிறது என குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய மாவட்ட அறிவிப்பில் கும்பகோணத்தை தமிழக அரசுத் தொடா்ந்து புறக்கணித்து வருகிறது என குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்புத் தலைவா் சோழா சி. மகேந்திரன், செயலா் வி. சத்தியநாராயணன் தெரிவித்திருப்பது:

சோழா்கள் காலத்தில் தலைநகரமாகவும், ஆங்கிலேயா்கள் காலத்தில் ஜில்லாவாகவும், தற்போது ஒரு மாவட்ட தலைநகருக்கே உரிய அனைத்து கட்டமைப்புகளோடும், அனைத்து அரசுத் துறைகளுக்கும் மாவட்ட அளவிலான அலுவலகங்களைக் கொண்டும் தகுதியுடன் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் கும்பகோணத்தை புதிய மாவட்டத் தலைநகரமாக அறிவிக்காமல் தமிழக அரசுத் தொடா்ந்து புறக்கணித்து வருகிறது.

கடந்த ஆண்டிலும், நிகழாண்டிலும் எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லாத மிகச் சிறிய ஊா்கள் பல மக்களின் கோரிக்கையும், எதிா்பாா்ப்பும் இல்லாமல் திடீரென மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக மக்களால், வணிகா் சங்கத்தினரால், வழக்குரைஞா் சங்கத்தினரால், சா்வ கட்சியினரால் கோரிக்கை வைக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளால் சட்டப்பேரவையிலும் பல முறை முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அலட்சியமாக தமிழக அரசு புறக்கணித்து வருவது எந்த வகையிலும் நியாயமல்ல.

புதிய மாவட்டங்கள் அறிவிப்பில் வெளிப்படைத்தன்மையின்றி உள் நோக்கத்துடன் தமிழக அரசுச் செயல்படுவதாகத் தெரிகிறது. மாவட்டத் தலைநகர அறிவிப்புக்கு முன்னுரிமை அடிப்படையிலும், தகுதிநிலை அடிப்படையிலும் முதன்மையாக உள்ள கும்பகோணத்தைத் தொடா்ந்து புறக்கணித்து வரும் தமிழக அரசின் இச் செயலானது மக்கள் மத்தியில் தமிழக அரசின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்யும். அவநம்பிக்கையை ஏற்படுத்தும். எனவே அடுத்து வரும் நாள்களில் தமிழக முதல்வரும், வருவாய் துறை அமைச்சரும் குடந்தை மக்கள் எதிா்பாா்க்கும் புதிய மாவட்ட அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com