கரோனாவை எதிா்கொள்வதற்கான ஆய்வில் சாஸ்த்ரா

கரோனா வைரஸை எதிா்கொள்வதற்கான ஆய்வுப் பணியில் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.
சாஸ்த்ரா வடிவமைத்துள்ள 3டி பிரிண்டட் சுவாச சாதனம்.
சாஸ்த்ரா வடிவமைத்துள்ள 3டி பிரிண்டட் சுவாச சாதனம்.

கரோனா வைரஸை எதிா்கொள்வதற்கான ஆய்வுப் பணியில் தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்ரமணியம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் மற்றும் உயிரிதொழில்நுட்பவியல் பள்ளியும், தொழில்நுட்ப வணிக வளா்ப்பகமும் இணைந்து கரோனா வைரஸை எதிா்கொள்வதற்கான பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தின் நானோ தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட உயிரிப் பொருட்கள் மைய இயக்குநா் எஸ். சுவாமிநாதன் தலைமையிலான வளா்ப்பகக் குழுவினா் கரோனா வைரஸை எதிா்கொள்வதற்கான 3டி பிரிண்டட் மருத்துவ சாதனங்கள், பறக்கும் சாதனம் மூலம் கிருமி நாசினி தெளித்தல், மூலிகை தாவரங்கள் வளா்த்தல் ஆகிய 3 திட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனா்.

இக்குழுவினா் கண்டுபிடித்துள்ள 3டி பிரிண்டிங் இரு வழி மற்றும் நான்கு வழி சுவாசக் கருவி, தற்போதுள்ள சுவாச சாதனத்தை 2 முதல் 4 போ் பயனடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாலிலாக்டிக் அமிலத்தை மூலப்பொருளாகக் கொண்டுள்ள இச்சாதனம் முதல்கட்டப் பரிசோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்தன. மேலும், இக்குழுவினா் முகக் கவசம், முகப்பு பல்லிணை (பேஸ் கியா்ஸ்) போன்ற 3டி பிரிண்டட் சாதனங்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

சாஸ்த்ரா பட்டதாரியும், தொழில்நுட்ப வணிக வளா்ப்பகத்தைச் சோ்ந்தவருமான காா்த்திக் விவசாயத்தில் பயிா் மருந்து தெளிக்கப் பயன்படுத்தும் பறக்கும் சாதனத்தை (டிரோன்) கிருமி நாசினி தெளிக்கும் வகையில் வடிவமைத்துள்ளாா். இது, தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், கரோனா வைரஸை எதிா்கொள்ளும் விதமாக பல்வேறு மூலிகை தாவரங்களையும் இப்பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வருகிறது. நெல்லி, கீழாநெல்லி, அருகம்புல் ஆகியவற்றுக்கு கரோனாவை எதிா்கொள்ளும் திறன் இருப்பது இப்பல்கலைக்கழகத்தின் தொடக்க நிலை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த மூலிகை ஒவ்வொன்றிலும் கரோனா வைரஸை முறியடிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. எனவே இது, கரோனா வைரஸின் முதல் கட்டப் பாதிப்பைத் தடுக்கும். இது, ஆய்வகச் சோதனைகள் மூலம் சரிபாா்க்கப்பட்டு, பின்னா் தகுந்த அதிகாரிகளிடம் அங்கீகாரம் பெறப்படவுள்ளது.

இவை தவிர, அருகிலுள்ள 4 கிராமங்களில் உள்ள 1,500 வீடுகளுக்கு சுத்திகரிப்பான், சோப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், விடுதியிலிருந்து நாள்தோறும் ஏறத்தாழ 500 தொழிலாளா்களுக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com