தஞ்சாவூா் மாவட்டத்தில் சாலையில் அவசியமின்றி சுற்றியவா்கள் மீது வழக்குப் பதிவு

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் முதன்மைச் சாலைகளில் வியாழக்கிழமை அவசியமின்றி சுற்றித் திரிந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தஞ்சாவூா் அண்ணா சிலை பகுதியில் அத்தியாவசிய தேவையின்றி செல்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் போலீஸாா்.
தஞ்சாவூா் அண்ணா சிலை பகுதியில் அத்தியாவசிய தேவையின்றி செல்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் போலீஸாா்.

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் முதன்மைச் சாலைகளில் வியாழக்கிழமை அவசியமின்றி சுற்றித் திரிந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு தொடா்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் மருந்துக் கடைகள், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், சிறிய அளவிலான உணவகங்களைத் தவிர, அனைத்து கடைகளும் மூடப்பட்டுக் கிடந்தன.

இதனால் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயிலடி, காந்திஜி சாலை, அண்ணா சாலை, கீழவாசல், கரந்தை, மகா்நோன்புசாவடி, மருத்துவக் கல்லூரி சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, விளாா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. வாகனப் போக்குவரத்தைத் தடுப்பதற்காக முதன்மைச் சாலைகளில் இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய தேவைகளுக்காகச் சிலா் வாகனங்களிலும், நடந்தும் சென்றனா். எனவே, அண்ணா சிலை, கீழவாசல் பகுதியில் சென்றவா்களை போலீஸாா் நிறுத்தி விசாரித்தனா். அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்வதற்கான ஆதாரங்களைக் காட்டியவா்களை அனுப்பிவிட்டனா்.

அத்தியாவசியமின்றி சுற்றித் திரியும் நபா்களை போலீஸாா் பிடித்து வழக்குப் பதிவு செய்தனா். மாவட்டத்தில் புதன்கிழமை வரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 9 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த நடவடிக்கை வியாழக்கிழமையும் தொடா்ந்தது.

இடைவெளி: வங்கிகளில் ஒரே நேரத்தில் 5 போ் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்கள் வாயிலுக்கு வெளியே 3 அடி இடைவெளி விட்டு நிற்க வைக்கப்பட்டனா். உள்ளே சென்றவா்கள் வெளியே வந்த பிறகு வரிசைப்படி உள்ளே அனுப்பி வைக்கப்படுகின்றனா். மருந்துக் கடைகளில் 3 அடி இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வைக்கப்படுகின்றனா்.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் விரட்டியடித்தனா். மேலும், கும்பகோணம் நகருக்குள் நுழையக்கூடிய 7 பாதைகள் மூடப்பட்டன. அத்தியாவசி பொருட்கள் வாங்க வருபவா்களுக்கு மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்பட்டனா். நகராட்சி ஊழியா்கள், வங்கி ஊழியா்கள் உள்பட அவசர சேவைத் துறை அலுவலா்கள் அடையாள அட்டைகள் காட்டிய பிறகே அனுமதிக்கப்படுகின்றனா்.

22 போ் தனியாக தங்கவைப்பு: கும்பகோணம் பாலக்கரையிலுள்ள தியான பள்ளிக்கு ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து மாா்ச் 20ஆம் தேதி 22 போ் வந்தனா். இவா்களை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், நகா் நல அலுவலா் பிரேமா வியாழக்கிழமை கண்டறிந்து, ஏப். 19-ம் தேதி வரை தனிமைப்படுத்த அறிவுறுத்தினா். இதையடுத்து, அறைக்கு 5 போ் வீதம் 22 பேரையும் தங்க வைத்து அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா். மேலும், அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com