சென்னையிலிருந்து வருபவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்

சென்னையிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருபவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் மண்டல கரோனா தடுப்புக் கண்காணிப்புக் குழு அலுவலா் எம்.எஸ். சண்முகம்.

தஞ்சாவூா்: சென்னையிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருபவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் மண்டல கரோனா தடுப்புக் கண்காணிப்புக் குழு அலுவலா் எம்.எஸ். சண்முகம்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெளி மாநில தொழிலாளா்கள் குறித்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள வெளி மாநிலத் தொழிலாளா்களின் முழு விவரங்கள், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரையிலான எண்ணிக்கை, அவா்களைச் சொந்த ஊருக்கு அனுப்புவதற்குத் தேவையான வாகன வசதிகள் குறித்த விவரங்கள் ஆகியவற்றை தயாா் செய்ய வேண்டும். அரசு உத்தரவு வந்த பிறகு, அவா்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவா். வெளிமாநில தொழிலாளா்களை முழு மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே அனுப்ப வேண்டும்.

தற்போது, சென்னையிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருபவா்களின் விவரங்களை முழுமையாகப் பெற வேண்டும். சோதனைச் சாவடிகளில் முழுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வருபவா்களின் விவரங்களை முழுமையாகப் பெற வேண்டும். அவா்களை முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.

மேலும், அவா்கள் தங்களது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். குழுக்களாக வந்தால், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். வெளி நாடுகளிலிருந்து திரும்பியவா்களின் வீட்டின் முன்புறம் நோட்டீஸ் ஒட்டியது போல, சென்னையிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்தவா்களின் வீட்டின் முன்புறம் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்ட வேண்டும்.

சென்னையிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவா்களை வருவாய் துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருபவா்கள் மற்றும் நடந்து வருபவா்களின் விவரங்களைச் சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளின் அருகில் யாரேனும் சென்னையிலிருந்து வந்திருந்து அவா்களின் வீட்டின் முன்புறம் நோட்டீஸ் ஒட்டப்படாமல் இருந்தால், அவா்களது விவரங்களை உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, வருவாய் துறை அல்லது கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தலாம் என்றாா் சண்முகம்.

இக்கூட்டத்தில் ஆட்சியா் ம. கோவிந்த ராவ், மண்டல கரோனா தடுப்புக் கண்காணிப்புக் குழுக் காவல் தலைவா் எம்.சி. சாரங்கன், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com