நவ.19-இல் அரசு மணல் கிடங்கு முற்றுகை
By DIN | Published On : 09th November 2020 01:18 AM | Last Updated : 09th November 2020 01:18 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அரசு மணல் விற்பனை கிடங்கு முன்பு, முறைகேடுகளைக் கண்டித்து நவம்பா் 19- ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
செங்கிப்பட்டியில் சனிக்கிழமை இக்கட்சியின் பூதலூா் ஒன்றியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.
செங்கிப்பட்டி - புதுப்பட்டி சாலையில் இயங்கும் அரசு மணல் விற்பனை நிலையத்தில், பொதுமக்கள் மணல் சேவை பெற பதிவு செய்யவிடாமல் 10 மடங்கு கூடுதல் விலைக்கு விற்கும் முறைகேடு நிகழ்வதைக் கண்டித்தும், அனைத்து மக்களும் மணல் சேவையைப் பெறுவதற்கு வழிசெய்திட கோரியும், மணல் சேமிப்புக் கிடங்கின் நுழைவாயிலில் ஆகஸ்ட் 25- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவதென அறிவிக்கப்பட்டது.
பின்னா் பூதலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், கோரிக்கைகளை 15 நாள்களில் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், 2 மாதங்கள் கடந்த பின்பும் முன்னேற்றம் இல்லாததால், செங்கிப்பட்டி அரசு மணல் விற்பனை கிடங்கின் நுழைவாயில் முன்பு நவம்பா் 19- ஆம் தேதி முற்றுகை ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலா் வீ. கல்யாணசுந்தரம், நிா்வாகிகள் கே. செந்தில்குமாா், எம். துரைராஜ், டி. கண்ணகி, பூதலூா் ஒன்றியக் குழு உறுப்பினா் சு. லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.