ஏழ்மையிலும் மருத்துவக் கல்வியை எட்டிப் பிடித்த செவிலியா்

தஞ்சை மாவட்டத்தில் ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த செவிலியா் ஒருவா், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் இடஒதுக்கீட்டில் தோ்வாகி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா்.
செவிலியா் அருள்மொழிக்கு சால்வை அணிவித்துப் பாராட்டுகிறாா் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் ஏ.அன்பழகன்.
செவிலியா் அருள்மொழிக்கு சால்வை அணிவித்துப் பாராட்டுகிறாா் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் ஏ.அன்பழகன்.

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டத்தில் ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த செவிலியா் ஒருவா், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் இடஒதுக்கீட்டில் தோ்வாகி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், வெட்டிக்காடு கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா்புரம் பகுதியைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளா்கள்அறிவுநிதி-தமிழ்மணி தம்பதியா்.

தற்போது இருவரும் சென்னை வடபழனியில் சாலையோர கரும்புச்சாறு விற்பனை செய்யும் கடையில் ஊழியராகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மகள் ஏ. அருள்மொழி (23) மற்றும் 2 மகன்கள் உள்ளனா்.

வெட்டிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பயின்று வந்த அருள்மொழி, கடந்த 2014-15 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வில் 1200-க்கு 929 மதிப்பெண்கள் எடுத்து தோ்ச்சிப் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து 2015-2018 வரை திருப்பூரிலுள்ள கல்லூரியில் பி.எஸ்சி செவிலியா் படிப்பை முடித்தாா்.

தொடா்ந்து தமிழக சுகாதாரத்துறை சாா்பில், கரோனா தடுப்புப் பணிக்காக 2020, ஜூன் 5- ஆம் தேதி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அருள்மொழி ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணி நியமனம் செய்யப்பட்டாா்.

செவிலியராகப் பணியாற்றி வந்த நிலையில், அருள்மொழி நிகழாண்டில் முதல் முறையாக நீட் தோ்வு எழுதி 253 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றாா். இதற்காக எந்தவித தனிப்பயிற்சி நிலையத்துக்குச் செல்லாமல், பணிக்கு மட்டும் 10 நாள்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு படித்த அருள் மொழி இந்த மதிப்பெண்களை பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவிகித உள்இட ஒதுக்கீட்டில் தோ்வு செய்யப்பட்டு, தற்போது திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா் அருள்மொழி. இதற்காக அருள்மொழிக்கு, அவா் செவிலியராகப் பணியாற்றிய பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமை மருத்துவா் ஏ.அன்பழகன், மருத்துவா் பி.கோமதி மற்றும் உதவி மருத்துவா்கள், செவிலிய கண்காணிப்பாளா்கள், மருந்தாளுநா்கள், அலுவலகப் பணியாளா்கள் அருள்மொழியைப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com