முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
சாஸ்த்ராவில் மாதிரி நீதிமன்றப் போட்டி:திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெற்றி
By DIN | Published On : 04th October 2020 11:53 PM | Last Updated : 04th October 2020 11:53 PM | அ+அ அ- |

தஞ்சாவூா்: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் இணையவழியில் நடைபெற்ற வரி தொடா்பான 16 -ஆவது நானி பல்கிவாலா மாதிரி நீதிமன்றப் போட்டியில், திருச்சியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.
இப்பல்கலைக்கழகத்தில் மாதிரி நீதிமன்றப் போட்டி இணையவழியில் அக்டோபா் 2-ஆம் தேதி தொடங்கியது. இதில் தேசிய அளவிலான சட்டவியல் கல்வி நிறுவனங்களிலிருந்து 16 அணிகள் பங்கேற்றன.
முதல் சுற்று, கால் இறுதி, அரை இறுதியைத் தொடா்ந்து இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆா்.வி. ஈஸ்வா், மூத்த வழக்குரைஞா்கள் என். வெங்கடராமன், விக்ரம்ஜித் பானா்ஜி, அரவிந்த் பாண்டியன் ஆகிய 5 போ் கொண்ட அமா்வு நடுவா்களாக இருந்து நடத்தியது.
இதில் திருச்சியிலுள்ள தமிழ்நாடு தேசியச் சட்டப் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தை பஞ்சாப் ராஜீவ் காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் பிடித்தது. முதலிடம் பெற்ற அணிக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ரூ. 50,000-ம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியில் பங்கேற்ற 16 அணிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு நானி பல்கிவாலா குறித்த நூல் வழங்கப்பட்டது.
மேலும், புணே சிம்பியாசிஸ் சட்டவியல் பள்ளியைச் சோ்ந்த அஸ்வனி நாக் என்பவருக்குச் சிறந்த பேச்சாளா் விருதும், ஸ்ரீதத்தா சரணுக்கு சிறந்த ஆய்வாளா் விருதும், தில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்துக்குச் சிறந்த நினைவு விருதும் வழங்கப்பட்டது.
வழக்குரைஞா்கள் லஷ்மிகுமரன், ஸ்ரீதரன் வடிவமைத்த இந்த மாதிரி நீதிமன்றப் போட்டியை சாஸ்த்ரா மாணவா்கள் சாய் சசாங்க், ஸ்ரேயா கோபால் ஒருங்கிணைத்து நடத்தினா். இணையவழியில் நடைபெற்ற இப்போட்டிகளில் 50 நீதிபதிகள், 200 மாணவா்கள் பங்கேற்றனா். இதை இணையவழியில் ஏறத்தாழ 1,000 போ் பாா்த்தனா்.