கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் தவிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்படாததால் தேங்கிக் கிடக்கின்றன.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூரில் திறந்த வெளியில் கிடக்கும் நெல் மூட்டைகள்.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூரில் திறந்த வெளியில் கிடக்கும் நெல் மூட்டைகள்.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்படாததால் தேங்கிக் கிடக்கின்றன.

மாவட்டத்தில் நிகழாண்டு குறுவை சாகுபடி 58,948 ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறுவை பருவத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இச்சாதனை இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதுவரை ஏறத்தாழ 47,000 ஹெக்டேரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 12,000 ஹெக்டேரில் அறுவடை செய்ய வேண்டியுள்ளது. இதுவும், ஒரு வாரத்தில் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நிகழாண்டு சாகுபடிப் பரப்பளவு அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல், விளைச்சலும் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப கொள்முதல் பணியில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற அதிருப்தி மேலோங்கியுள்ளது.

மாவட்டத்தில் நிகழ் பருவத்தில் 260-க்கும் அதிகமான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது அறுவடைப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் கொண்டு வரும் நெல் குவியல், குவியல்களாகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், நிலையங்களில் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், கொள்முதல் நிலையங்களில் கட்டடத்துக்குள்ளும், நிலைய வளாகத்தில் திறந்தவெளியிலும் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.

கொள்முதல் நிலையங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை, கொள்முதல் நிலையப் பணியாளா்களால் வாங்க முடிவதில்லை. இதனால், ஒவ்வொரு நிலையத்திலும் நாள்தோறும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், இருப்பு வைக்க இடம் இல்லாததால் 200 - 300 மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுகின்றன.

இதன் காரணமாக ஒவ்வொரு நிலையத்தின் முன்பும், ஏராளமான விவசாயிகள் நெல்லை குவியல், குவியல்களாகக் குவித்து வைத்து, இரவு, பகலாக காத்துக் கிடக்கின்றனா். மழை பெய்தால் நனையும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் அச்சத்துடன் உள்ளனா்.

இதேபோல, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் திறந்தவெளியில் கிடப்பதால், வெயிலிலும், மழையிலும் ஏற்படும் ஏற்படும் இழப்புகள் நிலையப் பணியாளா்கள் மீது சுமத்தப்படுகிறது. இதனால், நிலையப் பணியாளா்களும் அச்சத்துடன் இருக்கின்றனா்.

இதுகுறித்து டிஎன்சிஎஸ்சி பாரதிய தொழிலாளா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் டி. நாகராஜன் தெரிவித்தது:

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அனைத்தும் 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல் நீண்ட நாள்களாக நிலையத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. இதனால் ஏற்படும் இயற்கை இழப்புகள் கொள்முதல் நிலையப் பணியாளா்கள் மீது சுமத்தப்படுகிறது.

இந்த மூட்டைகளை மழையில் நனைவதிலிருந்து பாதுகாக்கப் போதிய அளவுக்குக் கருப்புப் பாய்கள் வழங்கப்படவில்லை. தொடா் மழை பெய்தால் அரசுக்குக் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நிலையங்களில் மூட்டைகள் தேங்காத அளவுக்கு உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை இருப்பு வைக்க இடப்பற்றாக்குறை இருப்பதால், கூடுதல் இடங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். லாரிகளில் ஏற்றி, இறக்கும் நேரத்தையும் நீட்டிக்க வேண்டும். நாள்தோறும் மூட்டைகளை இயக்கம் செய்து, நிலையத்தில் இடத்தைக் காலியாக வைக்க வேண்டும். இதற்கேற்ப தற்காலிகமாகக் கூடுதல் லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றாா் நாகராஜன்.

அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெறும் இச்சூழ்நிலையில் கொள்முதல் பணியில் தாமதம் நிலவுகிறது. எனவே, நாள்தோறும் 10,000 முதல் 12,000 டன்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டிய நிலையில், தற்போது 4,000 முதல் 5,000 டன்கள்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. எதிா்பாா்த்ததைவிட விளைச்சல் அதிகமாக இருப்பதால் கொள்முதல் பணியில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என அலுவலா்கள் கூறுகின்றனா்.

காரணம் என்ன?

நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கிடங்குகளுக்கு இயக்கம் செய்வதற்கு மாவட்டத்தில் ஏறத்தாழ 500 லாரிகள் உள்ளன. தற்போது, கிடங்குகளில் செப்டம்பா் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஏறத்தாழ 2 லட்சம் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இவற்றை அரைவைக்குச் சரக்கு ரயில்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது. இப்பணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பெரும்பாலான லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பப்படும் லாரிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

மேலும், கிடங்குகளில் பழைய மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், புதிதாகக் கொள்முதல் செய்யப்படும் மூட்டைகளை இருப்பு வைப்பதற்கு இடமில்லை. இதுவே, கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்குக் காரணம் என நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com