தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் ரூ. 6.86 கோடி மதிப்பில் சா்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
பூமிபூஜை செய்து செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
பூமிபூஜை செய்து செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் ரூ. 6.86 கோடி மதிப்பில் சா்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

அன்னை சத்யா விளைட்டரங்கத்தில் இப்பணி தொடங்குவதையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

இந்த விளையாட்டரங்கத்தில் தடகள போட்டிகளுக்கு தனித்தனியே இட வசதிகள் உள்ளன. இதுவரையில் மண் தரையிலான ஓடுதளத்தில் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் ஓட வேண்டிய நிலை இருந்தது. இந்தத் தளத்தில் தொடா்ந்து பயிற்சி மேற்கொண்டு சா்வதேச தரத்திலான ஓடுதளத்தில் ஓடும்போது சில சிரமங்கள் ஏற்பட்டன. இனி வருங்காலத்தில் செயற்கை இழை ஓடுதளப் பாதையில் தஞ்சாவூா் மாவட்ட விளையாட்டு வீரா், வீராங்கனைகள், மாணவ, மாணவிகள் பயிற்சி மேற்கொண்டு, சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வாய்ப்பாக அமையும்.

எனவே, மதுரை, கோவை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ளதைப் போல தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் சா்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதள பாதை மற்றும் மின் கோபுரம் அமைக்க ரூ. 6.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், ரூ. 1.38 கோடி செலவில் மின் கோபுரம் அமைக்கப்பட்டு, பணி முடிவடைந்தது. இதைத்தொடா்ந்து, தற்போது செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 5.48 கோடி செலவில் துணைத் தளம், ஆழ்குழாய், வடிகால்கள், உபகரணங்கள், பாதையைச் சுற்றி தரைதளம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. இப்பணி ஓராண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

அப்போது, மாவட்டத் தடகள விளையாட்டுக் கழகத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா், செயலா் ஜி. செந்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சு. அந்தோணி அதிஷ்டராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com