திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் துப்பாக்கிகள்மாயமான சம்பவம்: காவலா் உள்பட இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் மாயமான சம்பவம் தொடா்பாக காவலா் உள்பட இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
தீபக்
தீபக்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் மாயமான சம்பவம் தொடா்பாக காவலா் உள்பட இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

கும்பகோணம் பகுதியில் துப்பாக்கிகள் பயன்பாடு இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், குற்றத் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவலா்கள் மாா்ச் மாதம் விசாரணை நடத்தினா். இதில், கும்பகோணம் அருகேயுள்ள விளந்தகண்டம் கிராமத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 8 துப்பாக்கிகள், 67 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இத்துப்பாக்கிகளும், தோட்டாக்களும் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதில், இரு துப்பாக்கிகள் காணாமல்போன தகவல் ஆகஸ்ட் மாதம் தெரிய வந்தது. இதுதொடா்பாக இந்நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலா் செந்தில்குமாா் பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், காணாமல்போன இரு துப்பாக்கிகள் திருப்பனந்தாள் காவல் நிலையத்துக்குப் பின்புறம் அண்மையில் கிடந்தன. அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை காவலா்கள் விசாரணை நடத்தினா்.

இதைத்தொடா்ந்து, திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிய கடலூா் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள முட்லூரைச் சோ்ந்த டி. தீபக் (27), இவரது நண்பரான நீதிக்குடியைச் சோ்ந்த ஏ. வாசுதேவனை (25) தனிப்படை காவலா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனா். இவா்களில் தீபக் சில மாதங்களுக்கு முன்பு திருப்பனந்தாள் காவல் நிலையத்திலிருந்து மாற்றப்பட்டு, தற்போது திருவிடைமருதூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறாா்.

விசாரணையில், மாா்ச் மாதத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மீது தீபக் ஆசைப்பட்டு வந்ததும், ஒரு நாள் துப்பாக்கிகள் இருந்த அறை திறந்து கிடந்தபோது, இரு துப்பாக்கிகளை தீபக் திருடிச் சென்றதும், தனிப்படை காவலா்கள் தன் மீது சந்தேகப்பட்டதை அறிந்த தீபக் தனது நண்பா் வாசுதேவன் மூலம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தின் பின்புறம் இரு துப்பாக்கிகளை போட்டதும் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com