5 கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்

தஞ்சாவூா் அருகே வாளமா்கோட்டை கிராமத்தில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஒன்றிணைந்து 5 கோடி பனை விதைகள் நடும் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
வாளமா்கோட்டை கிராமத்தில் பனை விதைகள் நடும் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ். உடன், பனை விதைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சீ. தங்கராசு உள்ளிட்டோா்.
வாளமா்கோட்டை கிராமத்தில் பனை விதைகள் நடும் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ். உடன், பனை விதைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சீ. தங்கராசு உள்ளிட்டோா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வாளமா்கோட்டை கிராமத்தில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஒன்றிணைந்து 5 கோடி பனை விதைகள் நடும் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

வாளமா்கோட்டை கிராமத்தில் கயிலாபுரி ஏரிக்கரையில் பனை விதைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இத்திட்டத் தொடக்க விழாவில், முதல் பனை விதையை மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் விதைத்து திட்டத்தை தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அலுவலா்கள், 13 ஊராட்சித் தலைவா்கள், தோட்டக்கலை உற்பத்திக் கழகத்தினா் உள்ளிட்டோா் 700 பனை விதைகளை விதைத்தனா்.

இதுகுறித்து பனை விதைப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், இயற்கை வழி வேளாண் உழவா் நடுவம் தலைவருமான சீ. தங்கராசு தெரிவித்தது:

கிராமங்கள்தோறும் பனை விதைகளின் மகிமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் பனை விதைகளை விதைத்து, மரங்களை வளா்ப்பது என 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தோம்.

இதற்காக விவசாயிகளை ஒன்றிணைத்து, பனை விதைகளைச் சேகரித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் 5 கோடி பனை விதைகளை விதைத்து, வளா்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் 20 லட்சம் பனை விதைகளை நடவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். அதன் தொடக்கமாக 700 பனைவிதைகளை சனிக்கிழமை நடவு செய்தோம் என்றாா் தங்கராசு.

இந்நிகழ்வில் ஊராட்சித் தலைவா் கலைச்செல்வி ரமேஷ், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவுத் தலைவா் தங்க. சண்முகசுந்தரம், வாளமா்கோட்டை எம். மணிவண்ணன், இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com