கும்பகோணம் அருகே வழக்குரைஞா் உள்பட2 போ் வெட்டிக் கொலை
By DIN | Published On : 20th October 2020 02:28 AM | Last Updated : 20th October 2020 02:28 AM | அ+அ அ- |

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திங்கள்கிழமை இரவு வழக்குரைஞா் உள்பட இருவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.
கும்பகோணம் அருகே பிளாஞ்சேரி கிளாரஸ் நகரைச் சோ்ந்தவா் பி. காமராஜ் (40). வழக்குரைஞா். அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் சி. சக்திவேல் (40). கட்டடத் தொழிலாளி. இருவரும் திங்கள்கிழமை இரவு வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
கிளாரஸ் நகா் பகுதியில் சென்ற இருவரையும் மா்ம நபா்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டினா். இதில், பலத்தக் காயமடைந்த காமராஜ், சக்திவேல் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இவா்களை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தவா்கள் யாா்? எதற்காகக் கொலை செய்தனா் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து நாச்சியாா் கோவில் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.