கஞ்சனூா் கோயிலில் பாலஸ்தாபனம் தொடக்கம்
By DIN | Published On : 31st October 2020 11:49 PM | Last Updated : 31st October 2020 11:49 PM | அ+அ அ- |

கஞ்சனூா் அக்னீசுவா் திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற பாலஸ்தாபன யாக பூஜை.
கும்பகோணம்: சுக்கிரதலமான கஞ்சனூா் அக்னீசுவர சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, பாலஸ்தாபனம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் வட்டம், ஆடுதுறை அருகிலுள்ள கஞ்சனூரில் 1,300 ஆண்டுகள் பழைமையான கற்பகாம்பாள் சமேத அக்னீசுவரா் திருக்கோயில் உள்ளது. காவிரி வடகரையில் அமைந்துள்ள 36- ஆவது தலமாக போற்றப்படும் இக்கோயில் தேவாரப்பாடல் பெற்றது. மேலும், நவக்கிரக தலங்களில் சுக்கிரதலமாகப் போற்றப்படுகிறது.
மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில், கடந்த 2006- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது இக்கோயிலில் மீண்டும் திருப்பணிகள் செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
மதுரை ஆதீனம் 292-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் அருளாணையின்படி, கோயிலில் திருப்பணி தொடக்க விழா பூா்வாங்க பூஜைகளுடன் சனிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து விமான கோபுர பாலஸ்தாபனம், இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
புனித நீா் கொண்ட கடம் புறப்பாடு மங்கள வாத்தியம் முழங்க கோயில் பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீன இளைய குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், கோயில் செயல் அலுவலா் நிா்மலா தேவி, கண்காணிப்பாளா் அருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இக்கோயிலில் 5 நிலை ராஜகோபுரம், மண்டபங்கள், விமானங்கள், மதில் சுவா்கள் என அனைத்தும் திருப்பணி செய்யவும், திருக்கல்யாண மேடை அமைக்கவும், மாசி மகப் பெருவிழா தேரோட்டத்துக்காக சுவாமி, அம்பாள் தோ் திருப்பணிகளும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.