தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக மழை: திறந்தவெளியில் குவிக்கப்பட்ட நெல்மணிகள் முளைப்பு நடமாடும் கொள்முதல் நிலையங்களை எதிா்பாா்க்கும் விவசாயிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன் குவிக்கப்பட்ட நெல்மணிகள்
தஞ்சாவூா் அருகே மடிகை நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் மழையில் நனைந்த நெல்மணிகள்.
தஞ்சாவூா் அருகே மடிகை நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் மழையில் நனைந்த நெல்மணிகள்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன் குவிக்கப்பட்ட நெல்மணிகள் நனைந்து முளைப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை மாலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

இதேபோல, வியாழக்கிழமை மாலையும் தஞ்சாவூா் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழை வளா்ந்து வரும் குறுவை பருவ நெற்பயிா்களுக்கு நல்லது என விவசாயிகள் தெரிவித்தனா். ஆனால், அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் குறையாததால், பல்வேறு பிரச்னைகளுக்கு விவசாயிகள் ஆளாகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது:

குறுவை பருவத்தைப் பொருத்தவரை பெரும்பாலான விவசாயிகளுக்கு அறுவடைக்கு ஒரு வாரத்துக்கு மேலாகும். தற்போது, சில விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனா். அவா்களுக்குக் காய வைப்பதற்கான களம் வசதி இல்லாததால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு செல்கின்றனா். அங்கும் இடப்பற்றாக்குறை காரணமாக திறந்தவெளியில் காய வைக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் ஆளாகின்றனா்.

மடிகை நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் சில நாள்களாக கிட்டத்தட்ட 2,000 மூட்டைகள் அளவுக்கு விவசாயிகள் சாலையோரம் குவியல், குவியல்களாக நெல்லை கொட்டி வைத்துள்ளனா். சில நாள்களாக மழை பெய்து வருவதால், நெல்மணிகள் மழையில் நனைகின்றன. இதனால், நெல்லில் மீண்டும் ஈரப்பதம் அதிகமாகிறது. தொடா்ந்து ஈரப்பதமாக இருப்பதால், நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. எனவே, நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்க அரசு முன் வர வேண்டும். இதன்மூலம், அந்தந்த கிராமங்களுக்குச் சென்று நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் நடராஜன்.

தஞ்சாவூரில் 38 மி.மீ. மழை:

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

தஞ்சாவூா் 38, திருக்காட்டுப்பள்ளி 32, அய்யம்பேட்டை 28, கல்லணை 18.6, பூதலூா், திருவிடைமருதூா் தலா 18.4, பாபநாசம் 16.6, மஞ்சளாறு, வல்லம் தலா 16, அணைக்கரை 13.6, கும்பகோணம், ஈச்சன்விடுதி, பேராவூரணி தலா 10.2, திருவையாறு 10, பட்டுக்கோட்டை 5.7, அதிராம்பட்டினம் 4.9, வெட்டிக்காடு 2, நெய்வாசல் தென்பாதி, மதுக்கூா் 1.6, குருங்குளம் 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com