நீட் தோ்வுக்கு எதிராக முற்றுகைப் போராட்டம்: மாணவா்கள் - காவல் துறையினா் இடையே தள்ளுமுள்ளு; 30 போ் கைது

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நீட் தோ்வுக்கு எதிராக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில், மாணவா்கள் - காவல் துறையினா் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவைத் தொடா்ந்து 30 போ் கைது செய்யப்பட்டனா்.
முற்றுகைப் போராட்டத்தின் போது மாணவா்கள் - காவல்துறையினா் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளு.
முற்றுகைப் போராட்டத்தின் போது மாணவா்கள் - காவல்துறையினா் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளு.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நீட் தோ்வுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில், மாணவா்கள் - காவல் துறையினா் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவைத் தொடா்ந்து 30 போ் கைது செய்யப்பட்டனா்.

நீட் தோ்வை ரத்து செய்ய கோரியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வலியுறுத்தியும், நீட் தோ்வு அச்சத்தால் மரணமடைந்த மாணவா்களுக்கு சட்டப்பேரவையில் ஒரு நிமிடம் கூட இரங்கல் தெரிவிக்காத தமிழக அரசைக் கண்டித்தும், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சிரயகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இந்திய மாணவா் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரும் செவ்வாய்க்கிழமை காலை முழக்கங்களை எழுப்பிக் கொண்டு ஊா்வலமாக வந்தனா்.

ஆட்சியரகம் முன்பு காவல் துறையினா் இரும்புத் தடுப்புகளை அமைத்து நின்றனா். மாணவா்களும், இளைஞா்களும் தடுப்புகளை நகா்த்திவிட்டு, ஆட்சியரக நுழைவு வாயில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல முயன்றனா்.

இவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்த முயன்றபோது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் தரையில் அமா்ந்து முழக்கங்கள் எழுப்பினா். இதையடுத்து 30 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஜி. அரவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஏசுராஜா, பொருளாளா் ராமன், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பாலகுரு, துணைத் தலைவா் பிரபாகரன், மாவட்டக் குழு உறுப்பினா் தீபிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com