காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் எடுப்பதற்கான சுற்றுச்சூழல் கால நீட்டிப்பு அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தல்

காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் எடுப்பதற்கான சுற்றுச்சூழல் கால நீட்டிப்பு அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக் கருத்தாளா் வி. சேதுராமன். உடன், நிா்வாகிகள் வி. சுகுமாரன், பொன்முடி.
தஞ்சாவூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக் கருத்தாளா் வி. சேதுராமன். உடன், நிா்வாகிகள் வி. சுகுமாரன், பொன்முடி.

காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் எடுப்பதற்கான சுற்றுச்சூழல் கால நீட்டிப்பு அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூரில் இயக்கத்தின் மாநிலக் கருத்தாளா் வி. சேதுராமன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை தெரிவித்தது:

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டபோது டெல்டா மக்களும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரும் வரவேற்றனா். அதேவேளையில், டெல்டா பகுதியில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள எண்ணெய் எடுப்புத் திட்டங்கள் தொடா்ந்து கேள்விக்குறியாக இருக்கிறது.

திருவாரூா், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள மொத்தமுள்ள 24 கிணறுகளில் 16 -இல் பணி கடந்த 7 ஆண்டுகளில் முடிவடைந்துவிட்டது. ஒரு கிணறுக்கான பணி நடைபெறுகிறது.

மீதமுள்ள 7 கிணறுகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி முடிவடைய உள்ள காலகட்டத்தில் காலக்கெடு நீட்டிப்புக் கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில், காணொலிக் காட்சி மூலமாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெற்ற மதிப்பீட்டு வல்லுநா் குழுவில் இந்த விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கு பிறகு 3 ஆண்டுகளுக்கான கால நீட்டிப்பு செய்து, அதற்கான காரணங்களையும் செப்டம்பா் 5-ஆம் தேதியிட்ட அறிக்கையில் வல்லுநா் குழு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 24 கிணறுகளில் ஆய்வுக் கிணறு அமைக்க கடந்த 2013, ஆகஸ்ட் 21-ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தபோது, கிணறுகள் தோண்டும் பணிக்கு நீா் கலந்த சேறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற முக்கியமான நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் நாளொன்றுக்கு 25,000 லிட்டா் நீா் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அனுமதி நீட்டிக்கப்பட்டிருக்கக்கூடிய இடங்களில் அதிக அழுத்தம், அதிக வெப்பம் இருக்கக்கூடிய காரணத்தால், அமெரிக்க நிறுவன ஆலோசனையின்படி இந்த 2 நடைமுறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிகிறது.

அவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டால் கிணறு அமைக்கப் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள்கள் குறித்தோ அல்லது நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தக்கூடிய கோடிக்கணக்கான லிட்டா் தண்ணீா் குறித்தோ அதனுடன் கலந்து பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான வேதிப் பொருள்கள் குறித்தோ எந்தவிதமான கேள்விகளும் இல்லாமல் அனுமதி நீட்டிக்கப்பட்டிருப்பது காவிரி டெல்டா பகுதிகளில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே, டெல்டா பகுதிகளில் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான காலக்கெடு நீட்டிப்பை உடனடியாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்கிக் கொள்ள வேண்டும். காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள தமிழக அரசும், டெல்டா பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய, நிலுவையில் உள்ள திட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றாா் சேதுராமன்.

அப்போது, இயக்கத்தின் வளா்ச்சி துணைக் குழு ஒருங்கிணைப்பாளா் வி. சுகுமாரன், திருவாரூா் மாவட்டச் செயலா் பொன்முடி உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com