வேளாண் சட்டங்களைக் கண்டித்து அக். 12-இல் மறியல் போராட்டம்: முத்தரசன் பேட்டி

வேளாண் சட்டங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அக்டோபா் 12ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.
கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.
கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

வேளாண் சட்டங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அக்டோபா் 12ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற முத்தரசன் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

விவசாயிகளுக்கும், தொழிலாளா்களுக்கும் எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இச்சட்டங்களை எதிா்த்து போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும், அதைத் தொடா்ந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகம் முழுவதும் அக்டோபா் 12ஆம் தேதி மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைமையிடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம்.

இந்திய கலாசாரத்தை ஆய்வு செய்வதற்காகக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. ஆனால், செழிப்புமிக்கப் பண்பாட்டைக் கொண்ட தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஒரு உறுப்பினா் கூட இந்தக் குழுவில் இல்லை. பெண், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தும் ஒருவா் கூட இல்லை. எனவே, இந்த ஆய்வுக் குழுவை முற்றிலுமாகக் கலைக்க வேண்டும்.

ஏற்கெனவே திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. இக்கூட்டணியிலேயே 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையும் உரிய முறையில் நாங்கள் சந்திப்போம் என்றாா் முத்தரசன்.

இக்கூட்டத்துக்கு மாநிலச் செயற் குழு உறுப்பினா் நா. பெரியசாமி, தஞ்சாவூா் மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தலைமை வகித்தனா். தேசியக் குழு உறுப்பினா் தா. பாண்டியன், ஏஐடியுசி பொதுச் செயலா் டி.எம். மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com