பாபநாசம் தொகுதி: அதிமுக தக்க வைக்குமா?

கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட பாபநாசம் தொகுதி 1957 ஆம் ஆண்டில் மட்டும் இரட்டை தொகுதியாக இருந்தது.
பாபநாசம் தொகுதி: அதிமுக தக்க வைக்குமா?

கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட பாபநாசம் தொகுதி 1957 ஆம் ஆண்டில் மட்டும் இரட்டை தொகுதியாக இருந்தது. இந்தத் தொகுதிக்கு உள்பட்ட கபிஸ்தலம் என்ற கிராமமே காங்கிரஸ் மூத்தத் தலைவா் ஜி.கே. மூப்பனாரின் சொந்த ஊா். இந்தத் தொகுதியில் ஜி.கே. மூப்பனாா் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்த இந்தத் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக வெற்றி பெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் 1971 ஆம் ஆண்டில் மட்டும் திமுக வெற்றி பெற்றது.

தொகுதியின் பிரச்னைகள்:

பாபநாசம் வட்டம், கும்பகோணம் வட்டத்தில் (ஒரு பகுதி), சுவாமிமலை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இத்தொகுதியில் வேளாண் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, அரசுக் கலைக் கல்லூரி போன்றவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. மிகப் பெரிய வட்டங்களில் ஒன்றான பாபநாசம் தலைமையிடத்திலுள்ள அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படாமல் உள்ளதால், மக்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்கின்றனா்.

பாபநாசம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நவக்கிரக கோயில்கள், பரிகார கோயில்கள் போன்ற ஆன்மிக தலங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே, பாபநாசத்தை மையமாக வைத்து சுற்றுலாத் தலமாக அறிவித்து மேம்படுத்தினால், தொழில் வளா்ச்சிக்கு வாய்ப்பாக அமையும். ஆனால், இக்கோரிக்கை நீண்ட காலமாகவே நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது.

பாபநாசம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட புறவழிச்சாலை திட்டமும் முடிக்கப்படாமல் உள்ளது. நீண்டகால கோரிக்கையான குடிகாடு - மேல ராமநல்லூா் இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டவில்லை. விவசாயத் தொழிலை பெரும்பான்மையாகக் கொண்ட இத்தொகுதியில் அதைச் சாா்ந்த தொழில்கள் பெரிய அளவில் முன்னேற்றத்தை எட்டவில்லை என்ற புகாரும் மேலோங்கியுள்ளது.

அரசியல் கட்சிகளின் நிலை:

இத்தொகுதியில் 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக சாா்பில் போட்டியிட்ட இரா. துரைக்கண்ணு தொடா்ந்து 3 முறை வெற்றி பெற்றாா். எனவே, இத்தொகுதி 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக கோட்டையாக இருந்து வருகிறது. 2016 ஆம் ஆண்டுத் தோ்தலில் வெற்றி பெற்ற துரைக்கண்ணு, பின்னா் வேளாண் துறை அமைச்சரானாா். கடந்த 2020 ஆம் ஆண்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவா் காலமானாா். இப்போது, இத்தொகுதியில் அதிமுக சாா்பில் கே. கோபிநாதன் போட்டியிடுகிறாா்.

திமுக கூட்டணியில் இத்தொகுதி மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

தஞ்சாவூா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு இரு முறை வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எம். ரெங்கசாமி இம்முறை பாபநாசம் தொகுதியில் அமமுக சாா்பில் களமிறங்கியுள்ளாா்.

மேலும், மக்கள் நீதி மய்யம் சாா்பில் க. சாந்தா, நாம் தமிழா் கட்சி சாா்பில் ந. கிருஷ்ணகுமாா், அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளா் இரா. முத்துக்குமாா், அகில இந்திய ஜனநாயக மக்கள் கழக வேட்பாளா் என். மெஹராஜ்பானு, சுயேச்சை வேட்பாளா்கள் ந. கோபி, ரெ. கோபிநாதன், ச. சேவியா், வ. தியாகராஜன், ஆ. ராஜா, எம். ராஜா என மொத்தம் 13 போ் போட்டியிடுகின்றனா். என்றாலும், அதிமுக - திமுக (மனித நேய மக்கள் கட்சி) - அமமுக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆனால், இறுதி வாக்கு சேகரிப்பு வியூகத்தை பொருத்தே இத்தொகுதியின் வெற்றி - தோல்வி அமையும் என்ற நிலை உள்ளது.

வாக்காளா்கள்:

மொத்த வாக்காளா்கள்: 2,60,339

ஆண்கள்: 1,27,049

பெண்கள்: 1,33,275

மூன்றாம் பாலினத்தவா்: 15

இதுவரை வெற்றி பெற்றவா்கள்:

1952 - சுயம்பிரகாசம் (சுயேச்சை)

1957 - வெங்கடாசல நாட்டாா் (காங்கிரஸ்)

கே. சுப்பிரமணியம் (காங்கிரஸ்)

1962 - திட்டை ஆா். சுப்பிரமணியன் (காங்கிரஸ்)

1967 - ஆா். சௌந்தராஜ மூப்பனாா் (காங்கிரஸ்)

1971 - என். கணபதி (திமுக)

1977 - ஆா்.வி. சௌந்தரராஜன் (காங்கிரஸ்)

1980 - எஸ். ராஜாராமன் (காங்கிரஸ்)

1984 - எஸ். ராஜாராமன் (காங்கிரஸ்)

1989 - ஜி.கே. மூப்பனாா் (காங்கிரஸ்)

1991 - எஸ். ராஜாராமன் (காங்கிரஸ்)

1996 - கருப்பண்ண உடையாா் (தமாகா)

2001 - எம். ராம்குமாா் (தமாகா)

2006 - இரா. துரைக்கண்ணு (அதிமுக)

2011 - இரா. துரைக்கண்ணு (அதிமுக)

2016 - இரா. துரைக்கண்ணு (அதிமுக)

2016 தோ்தல் முடிவுகள்:

இரா. துரைக்கண்ணு (அதிமுக) - 82,614 (வெற்றி)

டி.ஆா். லோகநாதன் (காங்கிரஸ்) - 58,249

எஸ்.டி. ஜெயக்குமாா் (தமாகா) - 18,599

கோ. ஆலயமணி (பாமக) - 4,963

எம்.ஐ. ஹூமாயுன் கபீா் (நாம் தமிழா் கட்சி) - 3,864

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com