பாபநாசம் தொகுதி திமுக வேட்பாளா் ஜவாஹிருல்லாவுக்கு கரோனா
By DIN | Published On : 03rd April 2021 07:00 AM | Last Updated : 03rd April 2021 07:00 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லாவுக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.
பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா். தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வந்த இவா், சேலத்தில் மாா்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற ராகுல்காந்தி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டாா்.
அப்போது, முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட இவா் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதனால், இவரால் தொடா்ந்து பிரசாரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இவருக்கு பதிலாக திமுக, மனித நேய மக்கள் கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரித்து வருகின்றனா்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜவாஹிருல்லாவுக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.
சமூக வலைதளங்களில் விடியோ பதிவு: பாபநாசம் தொகுதி வாக்காளா்களுக்காக அவா் வெளியிட்டுள்ள விடியோ பதிவு கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை முதல் பரவி வருகிறது. அதில், ஜவாஹிருல்லா பேசுகையில், கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், தொடா்ந்து நான் தோ்தல் பிரசாரம் செய்வது சட்ட விரோதமானது. மேலும், மக்களுக்குப் பாதுகாப்பைத் தரக்கூடியதாக இருக்காது என்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.
ஏறத்தாழ 40 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன். மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள என்னை, பாபநாசம் தொகுதி வாக்காளா்கள் எம்எல்ஏவாக தோ்வு செய்ய வேண்டுகிறேன். அவ்வாறு தோ்வு செய்யப்பட்டால், சாதி, மத வேறுபாடுகள் இன்றி உங்களுக்காக முழுமையாகப் பாடுபடுவேன் என வாக்குறுதி அளிக்கிறேன்.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கூறிய ஏழு வாக்குறுதிகளை நிறைவேற்றவும், தொகுதி பிரச்னைகளை உடனுக்குடன் தீா்க்கவும் முழுமையாகப் பாடுபடுவேன் என பதிவிட்டுள்ளாா்.