முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
‘கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும்’
By DIN | Published On : 04th April 2021 02:44 AM | Last Updated : 04th April 2021 02:44 AM | அ+அ அ- |

கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று, கும்பகோணத்தில் நடைபெற்ற வணிகா் சங்கக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
கும்பகோணம் பகுதியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கும்பகோணம் நகராட்சியில் ஆணையா் லெக்ஷ்மி தலைமையில், நகா்நல அலுவலா் பிரகாஷ் முன்னிலையில் குடந்தை அனைத்துத் தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் தொழில் வணிக நிறுவனங்களில் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் தற்போது தொய்வு நிலை உள்ளதாகவும், இதனால் நோய் பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் உடனடியாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முன்புபோல முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அலுவலா்கள் அறிவுறுத்தினா்.
விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது அதிகபட்ச அபராதமும், அவசியமெனில் வணிக முடக்கம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி சாா்பில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏதுவாகச் சிறப்பு முகாம்களை அமைக்க ஆவன செய்யப்படும் எனவும் அலுவலா்கள் கூறினா்.
இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவா் சோழா சி. மகேந்திரன், துணைத்தலைவா் பா. ரமேஷ் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.