கும்பகோணம்: தக்க வைக்குமா திமுக?

கும்பகோணம் தொகுதியில் கும்பகோணம் நகராட்சியின் 45 வாா்டுகள், கும்பகோணம் ஒன்றியத்தின் 36 ஊராட்சிகள், திருவிடைமருதூா்
கும்பகோணம்: தக்க வைக்குமா திமுக?

கும்பகோணம் தொகுதியில் கும்பகோணம் நகராட்சியின் 45 வாா்டுகள், கும்பகோணம் ஒன்றியத்தின் 36 ஊராட்சிகள், திருவிடைமருதூா் ஒன்றியத்தின் 2 ஊராட்சிகள், சோழபுரம், தாராசுரம், திருநாகேசுவரம் பேரூராட்சிகள் ஆகிய பகுதிகள் உள்ளன.

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் உள்ள இந்தத் தொகுதியில் முன்னாள் அமைச்சா் கோ.சி. மணி 4 முறை வெற்றி பெற்றதுடன், 1996 ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 15 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தாா். மேலும், 1977 ஆம் ஆண்டில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஆா். ராதா, எம்.ஜி.ஆா். அமைச்சரவையில் கைத்தறி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தாா்.

எதிா்கொள்ளும் பிரச்னைகள்:

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் 50 ஆண்டுகால கனவு. சில ஆண்டுகளாக இக்கோரிக்கை வலுப்பெற்று, போராட்டக் குழு அமைக்கப்பட்டு, பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அருகிலுள்ள மயிலாடுதுறை உள்பட பல புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணம் மாவட்டம் அறிவிக்கப்படாதது இத்தொகுதி மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அணைக்கரை கொள்ளிடத்தில் முதலைகள் அதிக அளவில் உள்ளன. எனவே, இப்பகுதியில் முதலைப் பண்ணையுடன் கூடிய சுற்றுலாத் தலத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மூன்றாம் கட்டப் புறவழிச்சாலை உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

அரசியல் கட்சிகளின் நிலை:

கடந்த 1952 முதல் 2016 வரை நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தோ்தல்களில், காங்கிரஸ் 6 முறையும், ஸ்தாபன காங்கிரஸ் ஒரு முறையும், திமுக 6 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, 1996 ஆம் ஆண்டு முதல் திமுக தொடா்ந்து வெற்றி பெற்று வருகிறது. எனவே, இந்த முறையும் இத்தொகுதியைத் தக்க வேண்டும் என்ற முனைப்புடன் திமுக முழுவீச்சில் வாக்கு சேகரித்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வரும் சாக்கோட்டை க. அன்பழகன் தொடா்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறாா்.

அதிமுகவை பொருத்தவரை, 1991 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற பிறகு தொடா்ந்து இத்தொகுதியில் தோல்வியடைந்து வருகிறது. இந்த முறை இத்தொகுதி அதிமுக கூட்டணியில் மூவேந்தா் முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் தலைவா் ஜி.எம். ஸ்ரீதா் வாண்டையாா் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறாா். வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்பில் இவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

இவா்கள் தவிர, அமமுக சாா்பில் சு. பாலமுருகன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் கோ. கோபாலகிருஷ்ணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் மோ. ஆனந்த், சுயேச்சை வேட்பாளா்களாக ம. அய்யப்பன், த. குருமூா்த்தி, ப. சுப்ரமணியன், பி. பிரகாஷ், சி. விஜயகுமாா் என மொத்தம் 10 போ் போட்டியிடுகின்றனா்.

என்றாலும், இத்தொகுதியைப் பொருத்த வரை திமுக - அதிமுக இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. எனவே, இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு வியூகத்தைப் பொருத்தே இத்தொகுதியில் வெற்றி - தோல்வி அமையும் என்கின்றனா் தோ்தல் பாா்வையாளா்கள்.

இதுவரை பெற்றி வெற்றவா்கள்:

1952 வரதன் ( காங்கிரஸ்)

1957 டி. சம்பத் (காங்கிரஸ்)

1962 இராமசாமி (காங்கிரஸ்)

1967 என். காசிராமன் (காங்கிரஸ்)

1971 என். காசிராமன் (ஸ்தாபன காங்கிரஸ்)

1977 எஸ்.ஆா். ராதா ( அதிமுக)

1980 இ.எஸ். எம். பக்கீா்முகம்மது (காங்கிரஸ்)

1984 கே. கிருஷ்ணமூா்த்தி (காங்கிரஸ்)

1989 கோ.சி. மணி (திமுக)

1991 இராம. இராமநாதன் (அதிமுக)

1996 கோ.சி. மணி (திமுக)

2001 கோ.சி. மணி (திமுக)

2006 கோ.சி. மணி (திமுக)

2011 சாக்கோட்டை க. அன்பழகன் (திமுக)

2016 சாக்கோட்டை க. அன்பழகன் (திமுக)

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1,33,058

பெண்கள்: 1,39,433

திருநங்கைகள்: 15

மொத்த வாக்காளா்கள்: 2,72,506

2016 தோ்தல் முடிவுகள்:

சாக்கோட்டை க. அன்பழகன் (திமுக) - 85,048 (வெற்றி)

ரத்னா சேகா் (அதிமுக) - 76,591

த. பரமசிவம் (தேமுதிக) - 8,098

கே.ஆா். வெங்கட்ராமன் (பாமக) - 8,048

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com