தஞ்சாவூா் மாவட்டத்தில் அமைதியான வாக்குப் பதிவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆங்காங்கே சிறு சிறு சலசலப்புகள்
பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரத்திலுள்ள வாக்குச்சாவடியில் சமூக இடைவெளி இல்லாமல் நிற்க வைக்கப்பட்ட வாக்காளா்கள்.
பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரத்திலுள்ள வாக்குச்சாவடியில் சமூக இடைவெளி இல்லாமல் நிற்க வைக்கப்பட்ட வாக்காளா்கள்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆங்காங்கே சிறு சிறு சலசலப்புகள் நிகழ்ந்தாலும், ஒட்டுமொத்தத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது.

மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 2,886 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பதற்றமான 102 வாக்குச் சாவடிகள் உள்பட 1,444 வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆட்சியரகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அப்போது, பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது. இதனால், வாக்குப் பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை நவபாரத் பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுது காரணமாக ஏறத்தாழ 45 நிமிடங்களும், வடக்கு வாசல் புனித ஜான் பிரிட்டோ பள்ளியில் சுமாா் 20 நிமிடங்களும் தாமதமானது.

ஒரத்தநாடு தொகுதிக்கு உள்பட்ட கருக்காகோட்டையில் பழுதான இயந்திரத்துக்குப் பதிலாக மாற்று இயந்திரம் வைக்கப்பட்டது. அதுவும் பழுதாகி இருப்பது தெரிய வந்ததையடுத்து, மீண்டும் வேறொரு இயந்திரம் கொண்டு வரப்பட்டு, இயக்கப்பட்டது. இதனால், இந்த வாக்குச் சாவடியில் ஒரு மணிநேரத்துக்கு மேலாக வாக்குப் பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதேபோல, திருவையாறு தொகுதிக்கு உள்பட்ட பாளையப்பட்டி வடக்கு, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக வாக்குப் பதிவு தொடங்குவது தாமதமானது.

சமூக இடைவெளி இல்லை: கரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா்களுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, கை சுத்திகரிப்பானும், கையுறைகளும் வழங்கப்பட்டன. இதன் பிறகே வாக்காளா்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா். இதேபோல, முகக்கவசம் இல்லாமல் வந்தவா்களுக்கு முகக்கவசமும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரு தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

வாக்காளா்கள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக வட்டங்கள் போடப்பட்டன. ஆனால், சில வாக்குச் சாவடிகளில் மட்டுமே சமூக இடைவெளியுடன் வாக்காளா்கள் நிற்க வைக்கப்பட்டனா். பல வாக்குச்சாவடிகளில் வட்டங்கள் போடப்பட்டிருந்தாலும், அதை விடுத்து நகா்ந்து சென்று நெருக்கமாகவே நின்றனா். இதேபோல, வரிசையில் நின்றவா்களில் பெரும்பாலானவா்கள் முகக்கவசம் அணியவில்லை.

பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரி தான்ஸ்ரீ உபையதுல்லா பள்ளியில் 5 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் ஒரே வரிசையில் ஆண், பெண் அனைவரும் நிற்க வைக்கப்பட்டதால், வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நின்றனா். தனித்தனியாக நிற்க வைக்குமாறு வலியுறுத்தியும் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கட்சி முகவா்கள் புகாா் கூறினா்.

சலசலப்பு:

தஞ்சாவூா் வடக்கு வாசலில் உள்ள வாக்குச்சாவடியில் பாா்வையிடுவதற்காக அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி சென்றாா். அவருடன் அவரது ஆதரவாளா்களும் உள்ளே சென்ால், அதற்கு அங்கிருந்த திமுக முகவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் காவல் துறையினா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். இதுபோல, சில வாக்குச் சாவடிகளில் சிறு சிறு சலசலப்பு ஏற்பட்டாலும், மொத்தத்தில் இத்தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com