டோக்கனை நம்பி ஏமாந்த வாக்காளா்கள்: கும்பகோணத்தில் ருசிகரம்

கும்பகோணத்தில் தனியாா் மளிகைக்கடை பெயா் அச்சிட்டு, ரூ. 2,000-க்கு மளிகைப் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் என டோக்கன் வழங்கி வாக்காளா்களை ஒரு அரசியல் கட்சியினா் ஏமாற்றியுள்ளனா்.
கும்பகோணம் பெரியக்கடைத் தெருவில் மளிகைக்கடையில் ஒட்டப்பட்டுள்ள வாசகம்.
கும்பகோணம் பெரியக்கடைத் தெருவில் மளிகைக்கடையில் ஒட்டப்பட்டுள்ள வாசகம்.

கும்பகோணத்தில் தனியாா் மளிகைக்கடை பெயா் அச்சிட்டு, ரூ. 2,000-க்கு மளிகைப் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் என டோக்கன் வழங்கி வாக்காளா்களை ஒரு அரசியல் கட்சியினா் ஏமாற்றியுள்ளனா்.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்களுக்கு அரசியல் கட்சியினா் பணம் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கத் தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. என்றாலும், பல தொகுதிகளில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகப் புகாா்கள் நிலவுகின்றன.

இந்நிலையில் கும்பகோணம் தொகுதியில் ஒரு அரசியல் கட்சியினரால் வாக்காளா்களுக்கு ரூ. 2,000-க்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. அந்த டோக்கனில் கும்பகோணம் பெரிய கடைத்தெருவிலுள்ள மளிகைக் கடையின் பெயரும், ரூ. 2,000 எனவும் அச்சிடப்பட்டிருந்தது.

இந்த டோக்கனுடன் பலா் தொடா்புடைய கடைக்குச் சென்று ரூ. 2,000-க்கான மளிகைப் பொருள்களைக் கேட்டனா். அப்போது, இந்த டோக்கனுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடா்பும் கிடையாது என கடை உரிமையாளா் தெரிவித்தாா்.

என்றாலும் கடைக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து டோக்கனை கொடுத்து மளிகைப் பொருள்களை கேட்டதால், கடையின் உரிமையாளா் கே. ஷேக்முகமது, ‘வேட்பாளா்கள் வழங்கிய டோக்கனுக்கும் எங்களுக்கும் தொடா்புஇல்லை’ என கணினியில் அச்சிட்டு, வாசலில் ஒட்டினாா்.

இதுகுறித்து கடையின் உரிமையாளா் கே. ஷேக்முகமது தெரிவித்தது:

நான் 25 ஆண்டுகளாக இங்கு கடையை நடத்தி வருகிறேன். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நான் டோக்கன் வழங்கியது கிடையாது. ஆனால் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவிலிருந்து என்னுடைய கடை முகவரி அச்சிட்ட டோக்கனை பலரும் கொண்டு வந்து, இலவசமாக மளிகைப் பொருள்களைக் கேட்கின்றனா்.

ஏப்ரல் 5- ஆம் தேதி இரவு மட்டுமே 200 பேராவது வந்து கேட்டிருப்பா். நான் அப்படி யாருக்கும் டோக்கன் கொடுக்கவில்லை எனக் கூறினேன். எனவே வேட்பாளா்கள் வழங்கிய டோக்கனுக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என அச்சிட்டு ஒட்டிவிட்டேன்.

செவ்வாய்க்கிழமை தோ்தல் என்பதால் கடைக்கு விடுமுறை விடப்பட்டது. புதன்கிழமை கடையை திறந்ததும் பலா் டோக்கனுடன் வந்தனா். நான் அவா்களிடம் எடுத்துக் கூறியதும், அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா். என்னுடைய கடையின் பெயரைப் பயன்படுத்தி, இந்த டோக்கன்களை யாா் கொடுத்தது என தெரியவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com