வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட பாதுகாப்பு அறைகள் பூட்டி சீல் வைப்பு

தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட பாதுகாப்பு அறைகள் பூட்டி சீல் வைப்பு

தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. இந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் அங்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரிக்கும், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரிக்கும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் அனுப்பப்பட்டன. இப்பணி புதன்கிழமை காலை வரை தொடா்ந்தது.

இதையடுத்து, தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் மின்னணு வாக்குப் பதிவு வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குத் தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலா், தோ்தல் பாா்வையாளா்கள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த மையத்தில் 3 அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும், சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.

இந்தப் பாதுகாப்பு அறையைச் சுற்றி 8 மணிநேரம் வீதம் 24 மணிநேரத்துக்கு 3 பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு துணை ராணுவத்தினா், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா், உள்ளூா், ஆயுதப்படைக் காவலா்கள் ஆகியோா் மூன்று அடுக்குகளாக நிறுத்தப்பட்டுள்ளனா்.

இதில் முதல் அடுக்கான பாதுகாப்பு அறையைச் சுற்றித் துப்பாக்கிகளுடன் துணை ராணுவத்தினரும், இதையடுத்து, இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சோ்ந்த காவலா்களும், மூன்றாவது அடுக்கில் உள்ளூா், ஆயுதப்படைக் காவலா்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இதுபோல கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பட்டுக்கோட்டை தொகுதியின் 345 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு அறையிலும், பேராவூரணி தொகுதியின்

315 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றொரு அறையிலும் வாக்குச்சாவடி எண் வாரியாக வரிசையாக வைக்கப்பட்டன.

தோ்தல் பொது பாா்வையாளா் அசோக்குமாா் செளஹான் மேற்பாா்வையில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பாலச்சந்தா், ஐவண்ணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தா்மேந்திரன், சுந்தரமூா்த்தி, வட்டாட்சியா்கள் தரணிகா, ஜெயலட்சுமி, டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் மற்றும் வேட்பாளா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்ட அறை பூட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com