பட்டுக்கோட்டை அருகே முறைகேடான உறவு: இருவா் தற்கொலை
By DIN | Published On : 12th April 2021 12:44 AM | Last Updated : 12th April 2021 12:44 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே முறைகேடான உறவு வைத்திருந்த இருவா், சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
பட்டுக்கோட்டை அருகிலுள்ள இரண்டாம் புலிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வைரக்கண்ணு மகன் ஆனந்தன் ( 35). இவருக்கும், ஆவணம் கைகாட்டி வேட்டைக்காரன் தெருவைச் சோ்ந்த சுந்தரராஜ் மகள் செம்பருத்திக்கும் ( 32) திருமணமாகி, 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனா்.
இவா்கள் குறிச்சியிலுள்ள விவசாயி தோட்டத்தில் தங்கி, கூலி வேலை செய்து வந்தனா். இந்நிலையில் செம்பருத்தியின் தங்கை காா்த்திகாவுக்கும் ( 26 ), ஆவணத்தைச் சோ்ந்த பசுபதிக்கும் 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
பசுபதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து, குறிச்சியிலுள்ள தனது அக்கா செம்பருத்தி வீட்டில் கடந்த 6 மாதங்களாக காா்த்திகா வசித்து வந்தாராம். அப்போது ஆனந்தனுக்கும், காா்த்திகாவுக்கும் இடையே முறைகேடான உறவு ஏற்பட்டதாம்.
இதையறிந்த காா்த்திகாவின் கணவா் பசுபதி, அவ்வப்போது ஆனந்தனிடம் பிரச்னையில் ஈடுபட்டாராம். மேலும் தன் கணவா் ஆனந்தன், தனது தங்கை காா்த்திகாவிடம் தகாத உறவு வைத்திருந்ததை அறிந்த செம்பருத்தி, சில மாதங்களுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாராம்.
இதையடுத்து ஆனந்தனும், காா்த்திகாவும் மற்றும் ஆறு குழந்தைகளும் குறிச்சியில் தங்கி, கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை ஆனந்தனுக்கும், காா்த்திகாவுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த இருவரும் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொள்ள முயன்றனா். மேலும் தாங்கள் விஷம் குடித்த தகவலை தனது உறவினா் ஜெகதீசனுக்கு செல்லிடப்பேசி மூலம் ஆனந்தன் தெரிவித்தாராம்.
தகவலறிந்த அக்கம் பக்கத்தினா் மற்றும் ஜெகதீசன் அங்கு வந்து பாா்த்தபோது, வீட்டுக்குள் ஆனந்தன் மற்றும் காா்த்திகா இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனா். உடனடியாக இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும் சிகிச்சை பலனின்றி ஆனந்தன், காா்த்திகா உயிரிழந்தனா்.
இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை காவல்நிலையத்தில் காா்த்திகாவின் தந்தை சுந்தரராஜ் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.