சாரங்கபாணி கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்: ஏப்.26-இல் நடைபெறவிருந்த தேரோட்டம் ரத்து
By DIN | Published On : 18th April 2021 11:27 PM | Last Updated : 18th April 2021 11:27 PM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் கோமளவல்லி, விஜயவல்லி தாயாருடன் எழுந்தருளிய சாரங்கபாணி சுவாமி.
கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
108 திவ்யதேசங்களில் மூன்றாவது தலமாகவும், ஏழு ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் திகழ்கிறது.
இக்கோயிலில் தை முதல் நாளில் தைத் தேரோட்டமும், சித்திரை பௌா்ணமியில் சித்திரை பெரியத் தேரோட்டமும் நடத்தப்படும். அதன்படி, நிகழாண்டுக்கான சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் கோமளவல்லி, விஜயவல்லி தாயாருடன் சாரங்கபாணி சுவாமி எழுந்தருளினாா். இதையடுத்து, கொடிமரத்துக்குச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்கள இசை முழங்க கொடியேற்றப்பட்டது.
தொடா்ந்து ஏப்ரல் 28- ஆம் தேதி வரை காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான ஏப். 26-ம் தேதி நடைபெறவிருந்த சித்திரைப் பெரியத் தேரோட்டம் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.