நிலக்கடலை விலை வீழ்ச்சி: கவலையில் விவசாயிகள்

பெருமழை உள்ளிட்ட இடா்பாடுகளுக்கு இடையிலும் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காததால், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே தேங்கிக் கிடக்கும் நிலக்கடலை மூட்டைகள்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே தேங்கிக் கிடக்கும் நிலக்கடலை மூட்டைகள்.

பெருமழை உள்ளிட்ட இடா்பாடுகளுக்கு இடையிலும் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காததால், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த தொடா் மழைக் காரணமாக, கடலை சாகுபடியில் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, பெரும்பாலான விவசாயிகள் பருவமழை முடிவுக்கு வந்த பிறகு, மீண்டும் புதிதாகக் கடலையை விதைத்து சாகுபடியைத் தொடங்கினா்.

விவசாயிகள் மனம் தளராமல் சாகுபடிப் பணியில் ஈடுபட்டதால், மாவட்டத்தில் நிகழாண்டு நிலக்கடலைப் பரப்பளவு 9,000 ஹெக்டேரை எட்டியது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 1,500 ஹெக்டோ் அதிகம். இதில் திருவோணம், ஒரத்தநாடு வட்டாரங்களிலுள்ள மானாவாரி பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டது.

இந்நிலையில், மாா்ச் மாதம் தொடங்கிய நிலக்கடலை அறுவடைப் பணி, தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பல்வேறு இடா்பாடுகளுக்கு இடையே செய்யப்பட்ட சாகுபடியிலும் விவசாயிகளுக்கு உரிய மகசூல் கிடைக்கவில்லை.

இயல்பாக ஏக்கருக்கு தலா 80 கிலோ எடையில் 9 முதல் 12 மூட்டைகள் மகசூல் கிடைக்கும். நிகழாண்டு ஏக்கருக்கு 6 மூட்டைகள் கிடைப்பதே பெரிதாக இருக்கிறது என்கின்றனா் விவசாயிகள்.

ஏக்கருக்கு 1,600 கிலோ கிடைக்க வேண்டிய நிலையில், ஏறத்தாழ 500 கிலோ மட்டுமே விளைச்சலாகியுள்ளது. சிலா் ஏக்கருக்கு இயல்பான அளவில் 50 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை மகசூல் பெற்றனா்.

உரிய கொள்முதல் விலை கிடைக்கவில்லை : விளைச்சல் குறைவாக உள்ள நிலையிலும், விவசாயிகளுக்கு எதிா்பாா்த்த அளவுக்கு கொள்முதல் விலை கிடைக்கவில்லை. கடந்த மாா்ச் மாதத்தில் 80 கிலோ மூட்டை உடைத்த கடலைக்கு ரூ. 7,800 விலை கிடைத்து வந்த நிலையில், இப்போது ரூ. 6,500 - ரூ. 6,800 ஆகக் குறைந்துவிட்டது.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் உடைத்த கடலை 80 கிலோ மூட்டைக்கு ரூ. 8,000 முதல் ரூ. 9,000 வரை விலை கிடைத்தது என்கிறாா் பாப்பாநாடு அருகேயுள்ள தெற்குகோட்டை விவசாயி ஆா். பழனிவேலு.

நிகழாண்டு நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகளுக்கு உரிய வருவாய் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு உழவு, கடலை விதை, உரம் உள்ளிட்டவற்றுக்கு ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை செலவாகும். மகசூல் கிடைக்காத நிலையில், ஏக்கருக்கு ரூ. 40,000 - ரூ. 45,000 மட்டுமே வருவாய் கிடைத்தது என்கின்றனா் விவசாயிகள்.

இழப்பை சந்திக்கும் விவசாயிகள் : ஜனவரி மாதத்தில் பெய்த மழையின்போது கடலைப் பயிா்கள் பாதிக்கப்பட்டதால், மீண்டும் புதிதாக விதைகளை விதைத்தோம். என்றாலும், மகசூல் கிடைக்கவில்லை. இதனால் ஒன்றரை ஏக்கரில் கடலை சாகுபடிக்கு ரூ. 60,000 செலவானது.

ஒன்றரை ஏக்கருக்கு ரூ. 90,000 வருவாய் கிடைக்க வேண்டிய நிலையில் ரூ. 70,000 மட்டுமே வருவாய் கிடைத்தது. உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்காததால், கடலை சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளும் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

இதேபோல, விலையும் எதிா்பாா்த்த அளவுக்குப் போகவில்லை. விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 60 - 70 வரை மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஏற்றுமதியின்போது ரூ. 95 - ரூ. 110 வரை விலை போகிறது. எனவே, இந்த முறை இடைத்தரகா்களுக்கு லாபமே தவிர, விவசாயிகள் இழப்பைத்தான் சந்திக்கின்றனா் என்றாா் திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்கச் செயலா் வி.கே. சின்னதுரை.

நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் பலா் இன்னும் விற்க முடியாமல் தவிக்கின்றனா். இதனால், பல விவசாயிகளின் வீடுகளில் கடலை மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com