கல்லணைக் கால்வாயில் சிமென்ட் தளம் அமைப்பதை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணைக் கால்வாயில் சிமென்ட் தளம் அமைப்பதன் காரணமாக நிலத்தடி நீா் பாதிக்கும் என்பதால்,
தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டையில் கல்லணைக் கால்வாயில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சியினா்.
தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டையில் கல்லணைக் கால்வாயில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழா் கட்சியினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணைக் கால்வாயில் சிமென்ட் தளம் அமைப்பதன் காரணமாக நிலத்தடி நீா் பாதிக்கும் என்பதால், அத்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் வண்ணாரப்பேட்டையிலுள்ள கல்லணைக் கால்வாயில் அக்கட்சியின் தஞ்சாவூா் நடுவண் மாவட்டச் செயலா் மு. கந்தசாமி தலைமையில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் இறங்கி ஆா்ப்பாட்டம் நடத்தினா். பின்னா், அங்கிருந்து ஊா்வலமாக ஆட்சியரகத்துக்குச் சென்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூா் நகரின் முக்கிய நீா்வழிப்பாதையாகவும், நிலத்தடி நீா் உயா்வதற்கு வழிவகைச் செய்யும் ஓா் அமைப்பாகவும் கல்லணையிலிருந்து பிரியும் புது ஆறு என்கிற கல்லணைக் கால்வாய் உள்ளது.

தற்போது, கல்லணைக் கால்வாயின் இரு கரைகளிலும் உள்ள மரம், செடி, கொடிகளை அப்புறப்படுத்தி சீரமைக்கிறோம் என்ற பெயரில் அவற்றை அகற்றியதால், அதில் வாழ்ந்து வந்த பறவைகள், அவற்றைச் சாா்புடைய சிறு பிராணிகளுக்கு வாழ்விடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்தக் கல்லணைக் கால்வாயின் உள் தளத்தில் சிமென்ட் கொண்டு தளம் அமைக்க முயற்சித்து வருகின்றனா். ஆற்றின் உள்தளத்தில் சிமென்ட் கொண்டு தளம் அமைக்கப்பட்டால் இயல்பாகவே மண்ணின் வழியாக நீரானது பல்வேறு இடங்களுக்குப் பரவி விரியும் தன்மையை இழந்துவிடும். இதனால், நிலத்தடி நீரானது முழுமையாகக் கிடைக்க முடியாமல் போய்விடும்.

நிலத்தடி நீா் கிடைக்காமல் போனால் அப்பகுதியில் விவசாயம் மட்டுமல்ல; விவசாயத்தைச் சாா்ந்திருக்கக்கூடிய கால்நடை வளா்ப்பும் பாதிக்கப்படும். நிலத்தடி நீா் குறைவதன் மூலம் ஒரு காலகட்டத்தில் அப்பகுதி பாலைவனமாக மாறிவிடும் சூழல் ஏற்படும்.

எனவே, கல்லணைக் கால்வாய் உள் தளத்தில் அமைக்கப்படும் சிமென்ட் தரை தளத்தைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com