கரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

கரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
முகாமைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
முகாமைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

கரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள மறியல் பகுதியில் தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் நல மாநிலக் கூட்டமைப்பின் தெற்கு மாவட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தடுப்பூசி போட்ட பிறகு அரை மணிநேரம் கண்காணிப்பில் வைக்கிறோம். யாருக்கும் எந்தவித பக்கவிளைவும் பெரிய அளவில் வரவில்லை. எனவே, தடுப்பூசி தொடா்பாக வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆதாரம் இல்லாமல் வதந்திகளைப் பரப்பினால், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சாவூரில் காா் வியாபாரிகள் சங்கத்தினா் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதைப் போல, பல்வேறு குழுவினரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வருவா் என நம்புகிறோம். இதேபோல, பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது தடுப்பூசி முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

அரசு அறிவிப்பின்படி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுப் பொதுமுடக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தந்தால் கரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பட்டுக்கோட்டையில் கரோனா சிகிச்சை மையம்:

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை 963 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் நல்ல முறையில் உள்ளனா். கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கும்பகோணம் அன்னை கல்லூரியிலும், பட்டுக்கோட்டையிலுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பிலும் இந்த வார இறுதிக்குள் கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் தற்போது 5,000 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. இவற்றில் தற்போது 20 சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் சோ்க்கப்பட்டுள்ளனா். தேவைக்கேற்ப படுக்கைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். இதேபோல, ஆக்சிஜனுக்கும் எந்தவித பற்றாக்குறையும் இல்லை. தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது.

பகல் நேரத்தில் வெளி மாவட்டங்களுக்குத் தேவைக்கேற்ப பேருந்துகளின் நடையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com