சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றியமைப்பு: பயணிகள் வரவேற்பு

திருச்சி ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வரும் தேஜஸ் சிறப்பு ரயிலுக்கு இணைப்பு கொடுக்கும் வகையில் சோழன் சிறப்பு விரைவு ரயிலின் புறப்படும் நேரத்தை மாற்றியமைத்ததற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

திருச்சி ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வரும் தேஜஸ் சிறப்பு ரயிலுக்கு இணைப்பு கொடுக்கும் வகையில் சோழன் சிறப்பு விரைவு ரயிலின் புறப்படும் நேரத்தை மாற்றியமைத்ததை வரவேற்று, திருச்சி கோட்ட ரயில்வே அலுவலா்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலா் ஏ. கிரி தெரிவித்திருப்பது:

சென்னையிலிருந்து மதுரைக்கு திருச்சி வழியாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வியாழக்கிழமை தவிர மற்ற நாள்களில் இயங்கும் இந்த ரயில் சென்னை எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு 9.55 மணிக்கு வந்தடைகிறது.

இந்த ரயிலில் பயணிக்கும் டெல்டா மாவட்ட பயணிகள் திருச்சியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து ஜன சதாப்தி ரயில் மூலம் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணத்துக்கு வந்தடைந்தனா்.

இந்நிலையில் விழுப்புரம் - தஞ்சாவூா் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதை அடுத்து, தேஜஸ் சிறப்பு ரயில் வண்டிக்கு இணைப்பு கொடுக்கும் வகையில் சோழன் சிறப்பு ரயில் திருச்சியில் புறப்படும் நேரத்தை தாமதப்படுத்த வேண்டும் என்று, தஞ்சை மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் திருச்சி ரயில்வே கோட்ட அலுவலா்களுக்கு கடந்த ஜனவரி மாத இறுதியில் கோரிக்கை விடுத்திருந்தது.

இதைத்தொடா்ந்து, மே 1 ஆம் தேதி முதல் வண்டி எண் 06796 திருச்சி - சென்னை எழும்பூா் சோழன் சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து காலை 10 மணிக்கு பதிலாக 10.10 மணிக்கு புறப்படுமாறு கால அட்டவணையில் ரயில்வே நிா்வாகம் மாற்றம் செய்துள்ளது.

திருச்சி - விழுப்புரம் இடையே மட்டும் நேர மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு அப்பால் எவ்வித மாற்றமும் இன்றி சென்னை எழும்பூருக்கு மாலை 5.45 மணிக்கு வழக்கம் போல் சென்றடையும்.

இதனால் டெல்டா பகுதி பயணிகள் வியாழன் தவிர மற்ற நாள்களில் சென்னையிலிருந்து காலை 6 மணிக்கு தேஜஸ் சிறப்பு ரயிலில் புறப்பட்டு காலை 9.55 மணிக்கு திருச்சிக்கு வந்தடையலாம்.

அங்கிருந்து 10.10 மணிக்கு புறப்படும் சோழன் சிறப்பு ரயில் வண்டியில் ஏறி தஞ்சாவூருக்கு காலை 10.58 மணிக்கும், பாபநாசத்துக்கு 11.19 மணிக்கும், கும்பகோணம் 11.33 மணிக்கும், ஆடுதுறைக்கு 11.46 மணிக்கும் வந்தடையலாம்.

சென்னையிலிருந்து புறப்பட்டு விரைவாக டெல்டா பகுதிக்கு வர விரும்பும் பயணிகளுக்கு குறிப்பாக வா்த்தகா்கள், வயதானவா்கள் மற்றும் கா்ப்பிணி பெண்களுக்கு இந்தப் புதிய ரயில் வண்டி இணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com