மதுக்கடையை மூடக் கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டம்
By DIN | Published On : 27th April 2021 04:07 AM | Last Updated : 27th April 2021 04:07 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே மணக்கரம்பை கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே மணக்கரம்பை கிராமத்தில் மதுக்கடையை மூடக்கோரி, அக்கடை முன் பெண்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் அருகே மணக்கரம்பை புறவழிச்சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடை அருகே ஓராண்டுக்கு முன்பு கொலை சம்பவம் நிகழ்ந்தது. சில வாரங்களுக்கு முன்பு கடை விற்பனையாளருக்கும், மது அருந்த வந்தவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மேலும், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரத்தில் மது போதையில் சிலா் வீட்டுக் கதவைத் தட்டி தொந்தரவு செய்கின்றனா். அவ்வழியே செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
எனவே, இக்கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் கடை முன் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த டாஸ்மாக் அலுவலா்கள், நடுக்காவேரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மே 5 ஆம் தேதிக்கு பிறகு வேறு இடத்தில் கடையை அமைத்துக் கொள்ளலாம் என டாஸ்மாக் அலுவலா்கள் கூறியதையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனா்.