வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்குப் பயிற்சி

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சியில் பேசுகிறாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
பயிற்சியில் பேசுகிறாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தனித்தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்குத் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா், காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதேபோல பாபநாசம், திருவிடைமருதூா், கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படவுள்ளது.

இந்த வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்தராவ் தொடங்கி வைத்தாா்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் கவனமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மேஜைகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும்போது பதற்றம் அடையாமல் பணிகளை செய்ய வேண்டும் எனவும் ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் பி. அரவிந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com