தடையுத்தரவால் வாழ்வாதாரத்தை இழக்கும் பொம்மை வியாபாரிகள்

கரோனா பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவால், தஞ்சாவூரில் பொம்மை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனா்.
தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள பொம்மைக் கடைகள்.
தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள பொம்மைக் கடைகள்.

கரோனா பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவால், தஞ்சாவூரில் பொம்மை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனா்.

தஞ்சாவூா் பெரியகோயில் அருகே 33 பொம்மைக் கடைகள் உள்ளன. பெரியகோயில், அரண்மனை வளாகத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள், பக்தா்கள் இக்கடைகளில் விற்கப்படும் தலையாட்டி பொம்மைகள், நடன பொம்மைகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்வா். இங்கு, அதிகமாக வாங்குவது வெளியூா், வெளி மாநிலம், அயல் நாட்டுப் பயணிகளே. இதன்மூலம், ஒவ்வொரு வியாபாரிக்கும் நாள்தோறும் ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரை விற்பனையாகும். இந்த பொம்மை வணிகத்தை நம்பி ஏறத்தாழ 200 குடும்பங்கள் உள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் நடைமுறைக்கு வந்த முழுப் பொது முடக்கம் காரணமாக இக்கடைகளில் விற்பனை முழுமையாகப் பாதிக்கப்பட்டது. தஞ்சாவூா் பெரியகோயில் மீண்டும் 2020, செப்டம்பா் 1 ஆம் தேதி திறக்கப்பட்டது முதல் இக்கடைகளில் பொம்மை வியாபாரம் பழைய நிலையை எட்டவில்லை. தீபாவளி பண்டிகைக்கு பிறகு கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தா்களின் வருகை அதிகரித்தாலும், இக்கடைகளில் இயல்பான வியாபாரத்தில் கிட்டத்தட்ட 70 சதவீத பொம்மைகளே விற்பனையாகி வந்தன.

இந்நிலையில், கரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பொம்மை விற்பனை குறைந்தது. இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் பெரியகோயிலில் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் பக்தா்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதேபோல, சுற்றுலாத் தலங்களும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மூடப்பட்டன.

இதனால், இக்கடைகளிலும் பொம்மை விற்பனை குறைந்தது. திருமணம் உள்ளிட்ட விழாக்களில் பரிசுப் பொருள்கள் வழங்குவதற்காக உள்ளூா் மக்கள் சிலா் மட்டுமே வாங்கிச் செல்கின்றனா். எனவே, நாள்தோறும் ஏறத்தாழ ரூ. 5,000 அளவுக்கு விற்பனையான நிலையில், இப்போது ஒரு நாளைக்கு ரூ. 500-க்கு கூட வியாபாரமாகவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான வியாபாரிகள் கடைத் திறப்பதைக் கைவிட்டுள்ளனா். இப்போது, சுமாா் 5 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொம்மை வியாபாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனா். இந்த நிலைமை எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. எனவே, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்கிறோம் என்றாா் பெரியகோயில் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆா். ஜெயக்குமாா்.

உற்பத்தியும் குறைந்தது: விற்பனை நிலையங்களில் வியாபாரம் குறைந்துவிட்டதால் பொம்மைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், புதிய பொம்மைகள் உற்பத்தியும் பெருமளவில் குறைந்துவிட்டது. இதுகுறித்து தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை உற்பத்தியாளரான புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்த எஸ். பூபதி தெரிவித்தது:

கடந்த ஆண்டு ஏற்பட்ட தொய்வு இப்போதும் தொடா்கிறது. கடந்த 15 மாதங்களாக 10 சதவீதம் கூட வியாபாரமாகவில்லை. இதனால், தலையாட்டி பொம்மை உற்பத்தி 75 சதவீதம் குறைந்துவிட்டது. முன்பு மாதத்துக்கு ஏறத்தாழ 500 பொம்மைகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இப்போது 100 பொம்மைகள் கூட செய்யவில்லை. தொடா்ந்து வியாபாரம் இல்லாததால், இப்போது எங்களுக்கு மூலப்பொருள்கள் வாங்குவதற்கான முதலீடும் செய்ய முடியவில்லை. எனவே, அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. மீண்டும் வெளியூா், வெளி மாநில, அயல்நாட்டுப் பயணிகள் வந்தால் மட்டுமே இத்தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றாா் பூபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com